Tamilnadu

ஷவர்மா சாப்பிட்ட வாலிபருக்கு வாந்தி மயக்கம்.. கடைக்கு பூட்டுப்போட்ட உணவு பாதுகாப்புத்துறை!

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூஸ். இளைஞரான இவர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ஷவர்மா கடையில் ஆன்லைன் மூலம் ஷவர்மா ஆர்டர் செய்துள்ளார்.

பின்னர், வீட்டிற்கு வந்த ஷவர்மாவை சாப்பிட்டுள்ளார். பிறகு சில நிமிடங்களிலேயே அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஷவர்மா சாப்பிடுவதற்கு முன்பு அதிலிருந்து கெட்டுப்போன வாசம் வந்தது அவருக்கு நினைவுக்கு வந்தது.

இதனால், கெட்டுபோன ஷவர்மா சாப்பிட்டதால்தான் இப்படி வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது என தனது நண்பர்களுக்கு ஆண்ட்ரூஸ் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நண்பர்கள் அனைவரும் ஷவர்மா கடைக்கு சென்று முறையிட்டுள்ளனர். அப்போது கடை உரிமையாளர்கள் முறையான பதில் அளிக்கவில்லை. இது குறித்து அவர்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.

பின்னர் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஷவர்மா கடையில் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான மசாலா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஷவர்மா கடையைத் தற்காலிகமாக மூட உத்தரவிட்டுள்ளனர்.

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்ததை அடுத்து உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் ஷவர்மாவில் கெட்டுப்போன இறைச்சியைப் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: விடாமல் துரத்தும் காகங்கள்.. செத்ததை எடுத்துப்போட்டது குத்தமா.. கர்நாடக பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை !