Tamilnadu

75 நகரங்களை கடந்து சென்னை வந்தடைந்தது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ! -பிரம்மாண்ட வரவேற்புக்கு தயாரான தலைநகரம்..

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நாளை சென்னையில் துவங்கவுள்ளது. பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு முக்கிய தலைவர்கள் போட்டியின் துவக்க விழா நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

187 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ள இந்த போட்டி குறித்து பொதுமக்களிடையே வரவேற்பும் ஆதரவும் பெரும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விழிப்புணர்வு பிரச்சாரத்துக்காக ஜூன் 19 ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடி செஸ் ஒலிம்பியாட் ஜோதியானது தொடங்கி வைத்தார்.

முதலில் வடமாநிலங்களில் பயணித்த இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பின்னர் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு சென்று, 75-வது நகரான தமிழ்நாட்டிலுள்ள கோவைக்கு கடந்த திங்கள்கிழமை (23-ம் தேதி) வந்தடைந்தது. தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பயணித்த ஜோதி நேற்று கன்னியாகுமரியிலும், இன்று காலை போட்டி நடைபெறும் இடமான மாமல்லபுரம் கொண்டுவரபட்டது. செஸ் ஒலிம்பியாட் ஜோதியை மாமல்லபுரத்தில் அமைச்சர்கள், சதுரங்க விளையாட்டு சங்கத்தினர் வரவேற்றனர்.

ஜோதி செல்லும் இடமெல்லாம் மாணவர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், தற்போது மாலை 4 மணி அளவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி சென்னை வந்தடைந்து.

சென்னை வந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வரவேற்கும் வகையில் சென்னையில் மாநில கல்லூரி மைதானத்தில் இந்து அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் , சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரவேற்று துவக்க விழா நடைபெற உள்ள நேரு ஸ்டேடியத்திற்கு பேரணியாக கொண்டு சென்றனர்.

மாநிலக் கல்லூரி மைதானத்தில் துவங்கி காமராஜர் சாலை, ராஜாஜி சாலை, கொடிமர சாலை, அண்ணா சாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் சதுக்கம் ஈ.வே.ரா.சாலை, ராஜா முத்தையா சாலை வழியாக துவக்க விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நோக்கி இருசக்கர வாகனங்கள் மற்றும் மிதிவண்டிகளில் பேரணியாக சென்று ஜோதி எடுத்துச் செல்லப்பட்டது.

தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதிகள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கபட்ட பிரதான ஜோதியை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திடம் ஒப்படைக்க நேரடியாக ஜோதி நேரு ஸ்டேடியம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் பேரணியை உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கொடியாசித்து தொடங்கி வைத்தனர்.

Also Read: "தாய்மை தடையில்லை!" - நிறைமாத கர்ப்பிணியாக களத்தில் இறங்கும் Grand Master - யார் இந்த ஹரிகா துரோணவல்லி ?