Tamilnadu

வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மஞ்சப்பை வழங்கும் மதுரை ஹோட்டல்! விழிப்புணர்வுக்காக நெகிழ்ச்சி செயல் !

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பொருளை பயன்படுத்த வேண்டுமென்ற விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பரில் அறிமுகப்படுத்தியது.

இதை மக்களிடம் பிரபலப்படுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாக மதுரையில் ஒரு ஹோட்டல் வாடிக்கையாளர்களுக்கு மஞ்சப்பையைை இலவசமாக வழங்கி வருகிறது.

மதுரையில் இலை பரோட்டா, பொரிச்ச பரோட்டா என வெரைட்டியான உணவுகளுக்கு பிரபலமானது அழகரடி 'முக்கு கடை' கே.சுப்பு ஹோட்டல். பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் இந்த ஹோட்டலுக்கு மதுரையில் 5 கிளைகள் உள்ளன.

அரசின் கடையில் "மீண்டும் மஞ்சப்பை" இயக்கத்தை பிரபலப்படுத்தும் விதமாக இவர்கள் கடைக்கு பார்சல் வாங்க வருபவர்கள் மஞ்சள் பையுடன் வந்தால் அவர்களுக்கு 5% தள்ளுபடி வழங்கி இலவசமாக முகக்கவசமும் வழங்கி வருகிறார்கள்.

அதே போல முழு கிரில் அல்லது தந்தூரி சிக்கன் வாங்கினால் மஞ்சள் கலர் ஸ்கூல் பேக்கும், அரை கிரில் அல்லது தந்தூரி சிக்கன் வாங்கினால் மஞ்சப்பை போன்று உருவாக்கப்பட்ட மஞ்ச பரோட்டா மூன்றும் வழங்குகிறார்கள். இது தவிர பார்சல் வாங்கும் அனைவர்க்கும் மஞ்சப்பையில் உணவு பொருள்கள் வழங்குகிறார்கள்.

இது தொடர்பாக கடை நிர்வாகி கூறும்போது, இந்த திட்டம் மக்களிடைய நல்ல வரவேற்பை பெறுகிறது எனவும், அரசு அறிவித்துள்ள மஞ்சப்பை திட்டத்தை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் எடுத்த சின்ன முயற்சிதான் இது என்றும் கூறியுள்ளார்.

Also Read: Doctor to IPS ! தமிழ்நாட்டின் புதிய உளவுத்துறை IG செந்தில்வேலன் IPS யார்?