Tamilnadu

‘கட்சி நிகழ்ச்சியில் நடனமாட கட்டாயப்படுத்தினர்’ : பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது திருநங்கை பாலியல் புகார்!

சென்னை திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை ராஜம்மா. கடந்த 20 ஆண்டுகளாக பா.ஜ.க உறுப்பினராக இருக்கும் இவர், திரு.வி.க நகர் கலை இலக்கிய பிரிவு தலைவியாக பொறுப்பு வகித்துள்ளார். கடந்த மாநகராட்சி தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடுள்ளார்.

இந்த நிலையில் இவர் பா.ஜ.க மாவட்ட தலைவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருக்கும் கபிலன் தன்னை பாலியல் ரீதியில் அவதூறாகப் பேசியதாகவும், பதவி பெற்று தருவதாக ஏமாற்றியதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும், ஆட்களை அனுப்பி தன்னை மிரட்டியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் எழுத்துபூர்வமாக அவர் புகார் அளித்துள்ளார்.அதில், பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது கட்சியில் பதவி வாங்கி தருவதாக கூறி நேரு விளையாட்டரங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்டாயபடுத்தி கபிலன் நடனமாட வைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் நிகழ்ச்சிக்கு 50 பேரை வர வைத்தால் செயலாளர் பதவி வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் 50 பேருக்கு வாகனம் ஏற்பாடு செய்து அழைத்துவந்த நிலையில், அவர் சொன்ன எதுவும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு, 50 ஆயிரம் தந்தால் கட்சியில் பொறுப்பு தருவதாகவும் பணம் இல்லாவிட்டால் ஓடிவிடுமாறும் கூறி மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அவரை தனியாக வரச்சொல்லி தனது ஆதரவாளர்களுடன் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக பகிரங்க புகார் ஒன்றை கூறியுள்ளார். பல முறை சாலையில் என்னை நடனமாடவைத்து என்னை தவறாக பயன்படுத்துவதை உணர்ந்த பின்னர் இது தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க அவரிடம் சமரசம் செய்துள்ளது. இதை அறிந்த வடசென்னை மேற்கு மாவட்ட தலைவராக இருக்கும் கபிலன் தனது ஆதரவாளர்களை அனுப்பி ராஜம்மாவின் வீட்டுக்கு சென்று வீட்டில் இருந்த பொருள்களை அடித்து உடைத்ததாகவும் கூறியுள்ளார்.

பா.ஜ.க.வினரின் இதுபோன்ற செயலால் அரசியலில் இருக்கவே பயமாக இருக்கிறது என்று கதறி அழுதுள்ள அவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் கூறியுள்ளனர்.

Also Read: ”உள்ளாடையை அகற்றி குவியலாக போட்டனர்.. கதறி அழுத மாணவிகள்”- நீட் தேர்வு அவலத்தை வெளிப்படுத்திய மாணவி!