Tamilnadu

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு ; காவல் நிலையத்தை கொளுத்துவோம் என்று கூறிய இளைஞர் அதிரடி கைது!

கள்ளக்குறிச்சி தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி விடுதியில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் தொடர்பாக ஏற்பட்ட போராட்டம் கலவரமாக மாறியது.

இதில் போராட்டக்காரர்கள் பள்ளிக்கு வெளியே பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறையின் வாகனங்கள் மற்றும் பள்ளிக்குள் இருந்த பள்ளிக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் வகுப்பறைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி தீ வைத்து எரித்தனர்.

இதனால் அப்பகுதி கலவர பூமியாக காட்சியளித்தது. இதனை அடுத்து தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு உத்தரவின் பெயரில் அப்பகுதியில் ஏராளமான போலிஸார் குவிக்கப்பட்டு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி சுட்டும் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை சமூக வலை தளத்தில் பதிவிட்ட பலரை தமிழக மெங்கிலும் போலிஸார் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழுவில் ‘1500 இளைஞர்களை இணைத்து காவல் நிலையத்தை கொளுத்துவோம்’ என வாய்ஸ் மெசேஜ் பகிரப்பட்டது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், குழு அட்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Also Read: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: social media-ல் சர்ச்சை கருத்து.. அவதூறு பரப்பிய அதிமுக நிர்வாகிகள் கைது