Tamilnadu

குட்கா ஊழல் வழக்கு.. முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது வழக்கு பதிய அனுமதிகோரி CBI கடிதம்!

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் சென்னை அருகே உள்ள ஒரு குடோனில் வருமான வரித்துறையினரின் சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியின் டைரியில் குட்கா ஊழல் தொடர்பான குறிப்புகள் இருந்தன. அதில், போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அமைச்சர், மாநகராட்சி அதிகாரிகள், ஒன்றிய கலால்துறை என்று பல துறைகளைச் சேர்ந்தவர்கள் ரூ.45 கோடி வரை லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அப்போதைய தமிழக அரசுக்கு, வருமான வரித்துறை ஆணையர் கடிதம் எழுதியிருந்தார். பின்னர் சி.பி.ஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சி.பி.ஐ டெல்லி அதிகாரிகளைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் மற்றும் 2 ஐ.ஜி.க்கள், டி..ஐஜி.க்கள் உள்ளிட்ட போலிஸ் அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. மேலும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணையில் சட்டவிரோதமாக சம்பாதித்த 639 கோடி ரூபாயை பல மாநிலங்களில் அசையும், அசையா சொத்துகள் வாங்கிருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான 246 கோடி சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

இந்த நிலையில், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் ரமணா, சென்னை காவல் ஆணையர்களாக இருந்து ஓய்வுபெற்ற டி. ராஜேந்திரன், ஜார்ஜ் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு அனுமதி கோரி சி.பி.ஐ கடிதம் எழுதியுள்ளது.

முன்னாள் அமைச்சர்கள், IPS அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசின் அனுமதி தேவை என்பதால் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததும் இந்த விசாரணை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு ; காவல் நிலையத்தை கொளுத்துவோம் என்று கூறிய இளைஞர் அதிரடி கைது!