Tamilnadu

'எரிந்த சான்றிதழ்களின் புகை வாடை இன்னும் அடிக்கிறது': கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மனம் கலங்கிய அமைச்சர்!

கள்ளக்குறிச்சி வன்முறையில் சான்றிதழ்கள் இழந்த மாணவர்களுக்கு வருவாய்துறை மூலம் புதிய சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, "முதலமைச்சர் அறிவுறுத்தல்படி நேற்று அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் பள்ளியில் ஆய்வு செய்தோம். மறைந்த மாணவியின் தாய் கேட்டுக்கொண்டதற்கு இனங்க அவருக்கு பணி வழங்குவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பள்ளியில் மாணவர்களின் சான்றிதழ்கள் எரிக்கப்பட்டுள்ளன. நாற்காலி, இருக்கை உட்பட அனைத்தும் வன்முறையில் ஈடுபட்டவர்கள் எடுத்து சென்றுள்ளனர். சான்றிதழ்கள் எரிந்ததை பலர் அழுதபடி எங்களிடம் காட்டினர். சான்றிதழ்களில் புகை வாடை இப்போதும் அடிக்கிறது.

இந்த வன்முறை திட்டமிட்டு நடைபெற்றுள்ளது. கோபத்தில் வன்முறை ஏற்படவில்லை என நீதிமன்றமே கூறியுள்ளது. மாற்றுச் சான்றிதழ்கள் மட்டுமின்றி பிறப்பு சான்றிதழ் உட்பட மாணவர்களின் பல சான்றிதழ்கள் எரிந்துள்ளன.

எனவே வருவாய் துறை மூலம் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியின் அருகே 5 அரசுப் பள்ளி, 17 தனியார் பள்ளிகள், 2 கல்லூரி இருக்கிறது. இதை அந்த மாணவர்களுக்கு பயன்படுத்த முடியுமா என முதலமைச்சரின் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “NEP - நவீன வர்ணாசிரமக் கல்வியை புகுத்த நினைக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு..” : சாட்டை சுழற்றும் ‘முரசொலி’ !