Tamilnadu

சென்னை ஜெயின் கோவிலில் 46 சவரனை திருடிய குஜராத் பூசாரி.. மடக்கி பிடித்த போலிஸ் ! - நடந்தது என்ன ?

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள ரங்கநாதன் அவின்யூவில் 'ஸ்தாம்பர் மூர்த்தி ஜெயின் கோயில்' ஒன்று உள்ளது. இங்கே அதே பகுதியை சேர்ந்த மீனா (54) என்ற பெண் பூஜை செய்வது வழக்கம். இப்படியாக கடந்த 13 ஆம் தேதி, வழக்கம்போல் அந்த கோயிலுக்கு பூஜை செய்ய சென்றுள்ளார் மீனா. அப்போது பூஜை செய்வதற்காக தனது வீட்டிலிருந்த சுமார் 46 சவரன் தங்க நகைகளையும் எடுத்து சென்றுள்ளார்.

அப்போது அதை பூஜைக்காக வைத்து விட்டு, கோவிலை சுற்றி வந்து பார்த்தபோது அங்கிருந்த நகைகள் மாயமானது. பிறகு அங்கிருந்த பூசாரியை தேடியுள்ளார், அவரும் காணாமல் போயுள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த மீனா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் அதிகாரிகள், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அங்கிருந்த பூசாரி தனது நண்பர் ஒருவரின் உதவியால், அந்த நகைகளை தூக்கிக்கொண்டு போனது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து, செல்போன் டவர் மூலம் அவர் இருக்கும் இடத்திற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற பூசாரியை காவல்துறையினர் சுற்றிவளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அந்த பூசாரியின் பெயர் விஜய் ராவல் (38) என்றும், அவர் குஜராத்தை சேர்ந்தவர் என்றும், தனது நண்பன் மகேந்திரன் என்பவருடன் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 46 சவரன் தங்க நகைகளை மீட்ட அதிகாரிகள், உரிய ஆவணங்களை காட்டிய பின் மீனாவிடம் ஒப்படைத்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். தற்போது தலைமறைவாக இருக்கும் பூசாரியின் நண்பரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

குஜராத்தை சேர்ந்த சென்னை ஜெயின் கோயில் பூசாரி, பூஜை செய்ய வந்த பெண்ணின் நகைகளை திருடி தப்பிக்க முயன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 4 மாத குழந்தையை மொட்டை மாடியில் இருந்து தூக்கிய வீசிய குரங்கு.. உ.பி-யில் நடந்த சோகம் !