Tamilnadu

"வம்படியாக பேசி விளம்பரம் தேடுவோரை 'I Don't care' என்று அலட்சியப்படுத்துங்கள்" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்மையில் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தான் பூரண குணமடைந்து விட்டதாகவும், சூலை 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழ்நாட்டுக்கு பெருமை என்றும் அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு - பெயரால் மட்டுமல்ல, 'திராவிட மாடல்' ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்து வருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.

செஸ் ஆட்டத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்திடும் வகையில் முன்னோட்ட நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காணொலியும் வெளியிடப்பட்டு இளைஞர்கள், மாணவர்களிடம் செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறது. திருச்சியில் 2140 பேர் கலந்துகொண்ட செஸ் போட்டி உலக சாதனை புரிந்திருக்கிறது. மாண்புமிகு இந்திய ஒன்றியத்தின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் சூலை 28 அன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் இந்த நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க இருக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

‘வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக…’ என 'இசைப்புயல்' ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையான உடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்து, நாட்டு நடப்பைக் கவனிப்பதுபோலவே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கழகப் பணிகளையும் மருத்துவமனையிலிருந்தபடியே கவனித்து வந்தேன்.

கழக அமைப்புத் தேர்தல்கள் ஒன்றிய அளவில் முடிவுற்று, ஓரிரு இடங்களில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விரைவில் முழுமையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நடத்தி முடித்து, நமக்கான இலட்சியப் பாதையில் பயணித்து, மக்களுக்கான பணியினைக் கழகத்தினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள்.

என் கடன் பணி செய்து கிடப்பதே என்று சைவத் தமிழ்நெறி பாடிய திருநாவுக்கரசர் கூறியது போல, ‘என் பணி மக்கள் தொண்டாற்றுவதே’ என்று உறுதியேற்று செயலாற்றி வருகிறேன். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாகவும், உலக நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய மாநிலமாகவும் உயர்த்த வேண்டும் என்பது என் பெருங்கனவு. அதனை அடையவேண்டுமென்றால் இப்போது உழைப்பதைவிடவும் இன்னும் அதிகமாக உழைத்திட வேண்டும். நான் மட்டுமல்ல, நம்முடைய அரசில் பொறுப்பில் இருக்கும் அத்தனை பேரும் அயராது உழைத்திட வேண்டும். ஆளுங்கட்சி என்ற முறையில் கழகத்தினர் ஒவ்வொருவருக்கும்கூட அந்தப் பொறுப்பு இருக்கிறது.

உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. அரசியல் பாதையில் குறுக்கிடும் அத்தகைய பேர்வழிகளை, இடக்கையால் புறந்தள்ளி நாம் முன்னேறிச் செல்வோம்.

நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி 'I Don't care' என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள்.

வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: "'தமிழ்நாடு' - பெயரால் மட்டுமல்ல, 'திராவிட மாடல்' ஆட்சியாலும் பெருமை அடைகிறது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்