Tamilnadu
ரூ.12 கோடி லஞ்சம் வாங்கிய காவல் அதிகாரிகள்.. சுகேஷ் அளித்த புகாரால் 81 அதிகாரிகள் மீது நடவடிக்கை!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நடந்த அ.தி.மு.க அரசியல் மோதலில் இரட்டை இல்லை சின்னத்தை யார் பெறுவது என்று கடும் போட்டி நிலவியது. இதில் பழனிசாமி ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தினகரன் இருக்க, இருவருக்குமிடையே நேரடி மோதல் நடைபெற்றது.
அப்போது இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தருவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு இலஞ்சம் தர முற்பட்டதாக தினகரனும் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் என்பவரும் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இருவரும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், தினகரனுக்கு மட்டும் ஜாமீன் கிடைத்தது.
இந்த வழக்கில் கைதாகி, திஹார் சிறைக்கு சென்ற சுகேஷ், பின்னர் டெல்லி ரோகினி சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்தபடியே தனது மோசடி தொழிலை தொடர்ந்தார். அதன்படி சுகேஷ் இருந்த அதே சிறையில், மோசடி வழக்கில் கைதான 'போர்டிஸ்' மற்றும் 'ரான்பாக்சி' நிறுவனங்களின் முன்னாள் இயக்குநர்கள் ஷில்விந்தர் சிங் மற்றும் மல்விந்தர் சிங் ஆகியோரை விடுவிக்க உதவுவதாக கூறி ரூ.200 கோடி வரை பணம் பறித்துள்ளார் சுகேஷ்.
அதுமட்டுமின்றி, மேலும் பல்வேறு மோசடி வழக்குகளும் இவர் மீது பாய்ந்த நிலையில், ஜாமீன் கிடைக்காமல் தற்போது வரை சிறையிலேயே உள்ளார். இதனிடையே, இவரது மனைவியும், நடிகையுமான லீனா மரிய பால் என்பவரும் இவரது மோசடிக்கு துணை போனதாக திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் சுகேஷும், அவரது மனைவியும் உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பு வேண்டி மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் சிறையில் பாதுகாப்பாக, வசதியாக இருப்பதற்காக திஹார் சிறை காவல்துறையினருக்கு இதுவரை ரூ.12.50 கோடி வரை லஞ்சம் கொடுத்துள்ளோம். ஆனால் தற்போது அவர்கள் அதிக பணம் கேட்டு எங்களை மிரட்டுகிறார்கள். இதனால் எங்களது உயிருக்கு ஆபத்து உள்ளது" என்று குறிப்பிட்டிருந்தனர்.
தற்போது இந்த விவகாரத்தில், டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அதன்படி டெல்லி ரோகினி சிறையில் இருக்கும் 81 காவல் அதிகாரிகள் லஞ்சம் பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.
Also Read
-
T20 உலகக்கோப்பைக்கு தயாரான வாஷிங்டன் சுந்தர், திலக் வர்மா - தேர்வுக்குழு சொல்வது என்ன? : முழு விவரம்!
-
“NDA-வுக்கு தோல்வி எனும் தக்க பதிலடியை தமிழ்நாடு நிச்சயம் வழங்கும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“திராவிட மாடல் 2.0-விற்கு மகுடம் சூட்ட போகும் பெண்கள்” : அமைச்சர் கே.என்.நேரு உறுதி!
-
தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்கள் பட்டியல் போட முடியுமா? : பிரதமர் மோடிக்கு முரசொலி கேள்வி!
-
2016–2022ம் ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் அறிவிப்பு: யாராருக்கு என்னென்ன விருதுகள்: முழு விவரம் இதோ!