Tamilnadu

"என் அம்மாவோட கடைசி ஆசை.." தாயின் உடலை தானமாக வழங்கிய மகள்கள்.. சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம் !

சென்னை, திருவொற்றியூரில் உள்ள ஒத்தவாடை என்ற பகுதியில் வசித்து வந்தவர் முருகானந்தம் - மீனா தம்பதியினர். இவர்களுக்கு காயத்ரி மற்றும் சுவாதி என்ற 2 மகள்கள் உள்ள நிலையில், மீனாவின் கணவர் முருகானந்தம் சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக்குறைவால் இறந்தார். இதையடுத்து அச்சகத்தொழில் செய்து வந்த மீனா, தனது இரு மகள்களுக்கும் திருமணம் முடித்து வைத்த நிலையில், தனியாக அச்சகத்தொழில் செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மீனாவுக்கு உடல்நிலை கோளாறு ஏற்பட்டதால், மருத்துவமனையை அணுகியுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பதாகவும், பிழைப்பது கடினம் என்றும் தெரிவித்தனர். எனவே மீனா தனது மகள்களை அழைத்து, தான் இறந்த பிறகு, தன்னுடைய உடலை புதைக்கவோ, எரிக்கவோ வேண்டாம். மாறாக அதனை தானம் செய்து விடுங்கள் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, மீனாவின் உடல்நிலை மோசமாக ஆனதால், அவர் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தான் இறக்கப்போவதை அறிந்த மீனா, தனது மகள்களை மீண்டும் அழைத்து, தனது உடல் உறுப்புகளை மருத்துவமனைக்கு தானம் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சூழலில், சிகிச்சை பலனின்றி மீனா உயிரிழந்தார்.

எனவே அவரது உடலை முழுதாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தாயின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதற்காக, அவரது இறந்த உடலை மருத்துவமனைக்கு அப்படியே தனமாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இறந்த மனித உடல் பாகங்களை விற்று பணம் சம்பாதித்த பெண்” : அமெரிக்காவை நடுங்கச் செய்த சம்பவம் !