Tamilnadu
”எனக்கு வழிகாட்டும் திசைகாட்டியாக இருப்பவர் அண்ணன் துரைமுருகன்”: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி பேச்சு
நான் சிறப்பாக செயல்படுகிறேன், - வேகமாக உழைக்கிறேன் என்று சொன்னால், அதற்கு அண்ணன் துரைமுருகன் தான் காரணம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:-
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களும், இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களும் அடுத்தடுத்து நம்மை விட்டு விலகிய நிலையில், கழகத்தைக் கொண்டு செலுத்தக்கூடிய பெரும் கடமை, என்னுடைய தோளில் முழுமையாக விழுந்தது. அப்போது என்னைத் தாங்கி நிற்கக்கூடிய தூணாக இருந்தவர்தான் இங்கு இருக்கக்கூடிய அண்ணன் துரைமுருகன் அவர்கள்.
கட்சியைப் பொறுத்தவரை கழகத்தின் பொதுச்செயலாளராக, சட்டமன்றத்தைப் பொறுத்தவரையில் அவை முன்னவராக, ஆட்சியைப் பொறுத்தவரை அமைச்சராக இருந்து, எனக்கு வழிகாட்டும் திசைகாட்டியாக இருக்கிறார் அண்ணன் துரைமுருகன் அவர்கள்.
'துரை' - 'துரை' என்று தலைவர் கலைஞர் அவர்கள் எப்படி அவரை அழைத்து அருகில் வைத்துக் கொள்வாரோ, அதேபோல, என்னோடும் தோளோடு தோள் கொடுத்து நின்று வருகிறார் அண்ணன் அவர்கள். அவரை நான் சக அமைச்சராக அல்ல, என்னுள் ஒருத்தராக நினைத்துதான் அவரிடம் நான் அன்பு செலுத்தி வருகிறேன்.
என்னைச் சிறு வயது இளைஞராக பார்த்தவன் என்று அவர் அடிக்கடி எடுத்துச் சொல்வார். உண்மைதான். அவர் என்னை இளைஞராகப் பார்த்தவர், இன்று தலைவராகப் பார்க்கிறார். ஆனால், நான் உங்களை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் இடத்தில், இனமானப் பேராசிரியர் இடத்தில் வைத்துப் பார்க்கிறேன் என்று முன்பு ஒரு முறை சொன்னேன். அதையே இந்தக் கூட்டத்தில், இந்த விழாவில் நான் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் அண்ணன் துரைமுருகன் அவர்களின் பொதுவாழ்வுப் பொன்விழாவை முன்னிட்டு, சிறப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்து நான் பேசினேன். சட்டமன்றத்தின் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தொடர்ந்து அவரை வாழ்த்திப் பேசினார்கள். அண்ணன் துரைமுருகன் அவர்கள் நூற்றாண்டு விழாவையும் காண வேண்டும் என்று அந்த எண்ணத்தை, எனது வாழ்த்துகளை உங்கள் அனைவரின் சார்பாகவும் அங்கு சொன்னது மட்டுமல்ல, இங்கும் அதை வழிமொழிய நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
நான் சிறப்பாக செயல்படுகிறேன், - வேகமாக உழைக்கிறேன் என்று சொன்னால், அதற்கு அண்ணன் துரைமுருகன் போன்ற என்னுடைய அமைச்சரவைச் சகோதரர்கள் அனைவரும் அளித்து வரும் ஒத்துழைப்பும், செயல்பாடுகளும்தான் காரணம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
காவிக்கூட்டத்தையும், துரோகிகளையும் ஓட ஓட விரட்டும், Dravidian Stock கூட்டம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மாநில முதலமைச்சரை இப்படித்தான் நடத்த வேண்டுமா? : ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
“சுயலாபத்திற்காக செயல்படுகிறார் Watchman பழனிசாமி!” : கழக மாணவரணி ஆர்ப்பாட்டத்தில் ராஜீவ் காந்தி கண்டனம்!
-
நாளை (ஜூலை 15) முதல் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்! : மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
-
#சங்கி_பழனிசாமி : சமூகவலைதளத்தில் வைரலாகும் ஹேஷ்டாக்!