Tamilnadu

“குருமூர்த்தி உளறுவது மல்லாந்து படுத்து துப்பிக்கொள்ளும் பரிதாபத்தையே காட்கிறது” : கி.வீரமணி சாடல்!

‘ஒன்றியம்‘ என்ற சொல்லை வைத்து பிரச்சினை ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளன ‘துக்ளக்‘ குருமூர்த்தி போன்ற பார்ப்பன வகையறாக்கள் - ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கரின் ‘’ஞானகங்கை’’ என்னும் தமிழாக்க நூலில் ‘யூனியன்’ என்பதற்கு ஒன்றியம் என்று பொருள் கூறப்பட்டுள்ளதே - இதற்கு என்ன பதில்? என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் - மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களுக்கும் தலா ரூபாய் 100 பரிசளிக்கப் போவதாக ‘துக்ளக்‘ ஆசிரியராக தன்னை ஆக்கிக் கொண்டு அடையாளம் தேடிடும் ஸ்ரீமான் குருமூர்த்தி எழுதியுள்ளார்!

ஒன்றியம் என்று எழுதுவது தேசத் துரோகமா?

உலக மஹா மஹா அறிவாளியான அவர் யாரிடம், எப்போது, எதைப் பேசி, எழுதி வாங்கிக் கட்டி வசமாக மாட்டிக் கொள்பவர் என்பது உலகறிந்த செய்தியாகும்!

யூனியன்(Union) என்ற சொல்லுக்கு மத்திய அரசாங்கம் என்று எழுதாமல், பேசாமல் மேலே காட்டியுள்ள இரு தலைவர்களும் ‘ஒன்றியம்‘ என்ற சொல்லை பேசுவது, எழுதுவது, இவருக்கு மிகப்பெரிய தேசத் துரோகமாகப்படுகிறதாம்!

இவர் மட்டுமல்ல, காவிக் கட்சியினரும் ‘திராவிட மாடல்’ அரசியலின் திசையெட்டும் பரவும் பெருமையை, செரிமானம் செய்ய இயலாததால், ஏதேதோ பேசிவரும் நிலையில், ‘ஒன்றியம்‘ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கும் குருமூர்த்தி ஸ்டைலில் குற்றம் சுமத்தி மேடைகளில் உளறுவது உண்டு.

ரூ.100 பரிசளிக்கப் போகிறாராம் ‘துக்ளக்‘ குருமூர்த்தி

குருமூர்த்திகளுக்குச் (எழுதிக் கொடுப்பவர்களோ என்னவோ) சரியான பதிலை ‘முரசொலி’யின் ஆணித்தர தலையங்கம் இன்று எடுத்துக்காட்டியுள்ளது. (இரண்டாம் பக்கம் காண்க).

முன்னுக்குப் பின்முரணானது - அறிவுஜீவி குருமூர்த்தியின் கோணல் எழுத்துகள் என்பதற்கு அதிலிருந்தே ஆதாரம் காட்டி சாட்டையடித் தந்துள்ளது ‘முரசொலி’ - ரூ.100 அபராதம் முதல்!

தமிழ் நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும் ‘யூனியன்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச் சொல் (அகராதிப்படியே) ‘ஒன்றியம்‘ என்று!

ஆர்.எஸ்.எஸ். குருநாதர் கோல்வால்கரின் ‘’ஞானகங்கை’’யின் தமிழ்மொழி பெயர்ப்பில் ஒன்றியம் என்ற சொல் உள்ளதே!

தமிழை நீஷ பாஷையாக்கி கோவிலுக்குள் விடாது தடுக்கும் தர்ப்பைகளுக்கு இது புரியாமல் ‘தேசத் துரோக’ முத்திரையை தமிழாய்ந்தோர்மீது காட்டிடத் துடித்து, தம் அறியாமையை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கை நெறியாளராகக் கருதப்படும் கோல்வால்கர் (அவர்களால் ‘குருஜி; எனக் கொண்டாடப்படுபவர்) எழுதிய ‘Bunch of Thoughts’ நூலை தமிழாக்கம் செய்து ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டு - 1960 இல் வெளிவந்துள்ள (புத்தொளி பதிப்பகம், 82, சுவாமிநாய்க்கன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002) ‘‘ஞானகங்கை’’ நூலின் 325 - 326 ஆம் பக்கத்தில்,

‘‘இன்று நமக்குள்ள அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்டிரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வாய்ந்ததென்ற உறுதியான நம்பிக்கையில் ஆழ்ந்து ஊன்றியவர்கள் அல்லவென்பது நமது அரசியல் சாஸனத்தை சமஷ்டி அமைப்பாக நிறுவியதிலிருந்து புலனாகிறது; நமது நாடானது பல ராஜ்யங்களின் ஒன்றியம் (யூனியன்) என்று இன்று வர்ணிக்கப்படுகிறது....’’ - இவ்வாறு.

இவர்களது ஆர்.எஸ்.எஸ். கொள்கை ஏடே ‘யூனியன்’ என்பதற்குத் தமிழ்ச்சொல் ‘ஒன்றியம்‘ என்று பயன்படுத்தியுள்ளதையும், ஆர்.எஸ்.எஸ்.காரரான குருமூர்த்தி அன்ட்கோ ஏனோ பார்க்கவோ, படிக்கவோ மறந்து இப்படி உளறுவது அவர்கள் மல்லாந்து படுத்து மார்புமீது துப்பிக்கொள்ளும் பரிதாபத்தையே காட்டும்!

தமிழ் அறியாதவரும், தமிழ் வார ஏட்டின் ஆசிரியர்! ‘‘ஏ தாழ்ந்த தமிழகமே!’’ என்றுதான் நாம் வேதனைப்பட்டுக் கேட்க வேண்டியுள்ளது. வேதனைதான்! வெட்கமும்கூட!

இவருக்கு ஒரு ஆங்கிலம் - தமிழ் அகராதியைப் பரிசாக அளிக்கலாம்.