Tamilnadu

“ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு நடவடிக்கை.. அதிரடி ஆய்வு” : களம் இறங்கிய ராதாகிருஷ்ணன் IAS !

கொரோனா காலகட்டத்தில் மிகவும் துரிதமாக செயல்பட்டு தமிழ்நாடு அளவில் பிரபலமாக திகழ்ந்தவர் தான் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். இவர் கொரோனா காலகட்டத்தில் மட்டுமல்லாமல், அதன் பிறகு வந்த ஒமிக்ரான் வைரஸ் தொற்று காலத்திலும் மக்களுக்கு பல சேவைகளை செய்து வந்தார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு அரசுத்துறை ரீதியாக அதிகாரிகள் இடமாற்றம் செய்யக்கூடிய பட்டியல் தயாராகி வெளிவந்தது. அதில் சுகாதார செயலாளராக செயல்பட்டு வந்த ராதாகிருஷ்ணன் பெயரும் இடம்பெற்றிருந்தது. அதன்படி சுகாதார துறையில் இருந்த அவர், கூட்டுறவுத்துறை மற்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதனால் கடந்த இரண்டு நாட்களாக இந்த சம்பவம் பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு அரிசி கடத்தல் நடப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அரசி கடத்தலை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி, தற்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன், கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகள், நியாய விலைக் கடைகள், அமுதம் அங்காடிகள் உள்ளிட்டவற்றில் இன்று காலை முதலே தொடர் ஆய்வு நடத்திய ராதாகிருஷ்ணன், அரிசி மற்றும் சர்க்கரையின் தரத்தை பரிசோதித்தார்.

இதேபோல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளின் ஊழியர்களிடமும் பேசி அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். கூட்டுறவு துறையில் தான் பொறுப்பேற்ற இரண்டே நாட்களில், மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்தக்கத் தொடங்கியுள்ளார்.

மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்டப் பொருட்கள் தரமாக உள்ளதா என ஆய்வு நடத்தி ஊழியர்களின் குறைகளையும் கேட்டறிந்தார். அதோடு தான் தற்போது பொறுப்பேற்றுள்ள துறையில், உள்ள குறைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

ஆய்வு முடிந்த பிறகு கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “நான் இந்த துறையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஊழியர்களின் கருத்தைக் கேட்டு பணியாற்றுவேன். விவசாயிகளின் நெல் கொள்முதல் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்.

நெல் கொள்முதல் செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, அவர்கள் முறையாக செயல்படுத்துகிறார்களா என்பதை நானே நேரடியாக சென்று ஆய்வு செய்வேன். ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் அமுதம் அங்காடிகள் உலகத்தரத்துக்கு தரம் உயர்த்தப்படும்.'' என தெரிவித்தார்.

Also Read: ஷவர்மாவை தொடர்ந்து மோமோஸ் சாப்பிட்ட நபர் உயிரிழப்பு - எச்சரிக்கை விடுத்த எய்ம்ஸ் மருத்துவர்கள்!