Tamilnadu

“பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் சொன்ன ஒருவரிதான் பாஜகவினர் கதறலுக்கு காரணம்” : சுப.வீரபாண்டியன் விளாசல்!

ஒன்றிய அரசு தமிழகத்துக்கு திருப்பி தருவது 1.21 சதவீதம்தான் என பிரதமரை வைத்துக்கொண்டு முதல்வர் சொல்லும் துணிச்சல் தான் பா.ஜ.க-வினரை கதற வைப்பதாகும் என திராவிடர் தமிழர் இயக்க பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்

கோவை ஆவாரம்பாளையம் பெரியார் திடலில் "இந்தியாவுக்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சி" பொதுக்கூட்டம் நடைபெற்றது. திராவிடர் தமிழர் இயக்க பேரவை சார்பில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அதன் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய சுப.வீரபாண்டியன், “திராவிட மாடல் என்பது பொருளாதாரத்தையும் சமூகநீதியும் உள்ளடக்கிய வளர்ச்சி. இரண்டையும் உள்ளடக்கி தமிழகத்தில் நடக்கின்ற இந்த திராவிட மாடல் ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும்.

கோரிக்கைகளை வைப்பதற்கு தான் முதல்வர் இருக்கிறார். இந்த மாநிலத்தின் தேவைகளை நம் கோரிக்கைகளை பிரதமருக்கு எடுத்துச் செல்வது என்பது ஒரு முதலமைச்சரின் அடிப்படை கடமைகளில் ஒன்று. இது முன்மாதிரியான நிகழ்வு இல்லை. நேரு மேடையில் இருந்த போதுதான் காமராசர் கோரிக்கைகளை வைத்தார். இதை எதிர்க்கட்சிகள் பாராட்ட வேண்டும்.

மேடையில் முதல்வர் வைத்த கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விளக்கம் தருகிறேன் என பிரதமர் கூறியிருந்தால் உண்மையாக பிரதமருக்கு பெருமையும் புகழும் சேர்ந்திருக்கும். அண்ணாமலை ஆதங்கப்படுகிற அளவுக்கு கூடுதலாக கைதட்டல்களும் கிடைத்திருக்கும்.

முதல்வர் மேடையில் கூறிய புள்ளிவிவரத்தின் கடைசியில் வைத்த ஒரு வரிதான் பா.ஜ.க-வினர் கதறும் அதற்குக் காரணமாக இருக்கிறது. ஒன்றியத்துக்கு என தனியாக வருமானம் ஏதும் இல்லை. 29 மாநிலங்கள் இணைந்து தரவேண்டிய ஜி.எஸ்.டி 100% என்றால், ஒவ்வொரு மாநிலம் தர வேண்டிய பங்கு 3.44 சதவீதம். பல மாநிலங்கள் இதை தருவதில்லை.

மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்கள் இதை ஈடுகட்டுகிறது. கொடுக்கப்பட்ட அளவைக் காட்டிலும் மூன்று மடங்கு 9.22 சதவீதம் கூடுதலாக தருவதாகவும், ஒன்றிய அரசு தமிழகத்துக்கு திருப்பி தரவது 1.21 சதவீதம்தான். பிரதமரை வைத்துக்கொண்டு சொல்லும் துணிச்சல் தான் பா.ஜ.க-வினரை கதற வைப்பதாகும். நமது முதலமைச்சர் செய்ய வேண்டியதைச் மிக நுட்பமான முறையில் செய்தார்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: பிரதமர் மேடையில் முதிர்ந்த அனுபவம், அரசியல் நாகரீகம்.. தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார் முதலமைச்சர் !