Tamilnadu

“11 ஆண்டுகளுக்கு பிறகு அந்தக் கட்டடத்திற்கு அவர் வந்திருந்தார்” : கலைஞரின் நினைவுகளை பகிர்ந்த அமைச்சர்!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை சிறப்பித்துப் போற்றிடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில், இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.

இந்நிலையில் சிலைதிறப்பு சம்பவம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு நெகிழ்ச்சி பதிவு ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பகிர்ந்துள்ள பதிவில், “தலைமைச் செயலகம்.

காலையும், மாலையும் எந்தக் கட்டடத்தின் வாயில்கள் அவரது வரவுக்காகத் தினசரி காத்திருந்ததோ, அந்தக் கட்டடத்திற்குப் பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று அவர் வந்திருந்தார்.

தலைமைச் செயலகத்தில் இருந்து அண்ணா சாலை வழியே வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் எந்தக் கட்டடத்தைப் பார்த்துக் கொண்டே பயணிப்பாரோ, அதே கட்டட வளாகத்தில் நின்று கொண்டு அண்ணா சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அங்கிருந்து அவர் கையசைத்த காட்சியைப் பார்த்த போது, என்னையும் அறியாமல் என் நெஞ்சக் கூட்டில் அலைபாய்ந்த உணர்வுகளை என்னால் அடக்க முடியவில்லை. உணர்ச்சிப் பெருக்கால் என் கண்களில் நீர்த்திரையிட்டுத் ததும்பி நின்றதைத் தடுக்க முடியாமல் ஒரு கணம் தடுமாறிப் போனேன்.

எந்த கட்டடத்தைத் தன் சிந்தனையாலும், செயல் திறத்தாலும் பார்த்துப் பார்த்துச் செதுக்கினாரோ, அதே இடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் சிலையாக நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

அந்தக் கட்டடத்தில் அவருடனான எண்ணற்ற உரையாடல்களை அவரது முகத்தைப் பார்த்த வண்ணம் அசை போட்டுக்கொண்டுருந்தேன். எத்தனை செய்திகள்- எவ்வளவு விஷயங்கள்- என்னென்ன அறிவுரைகள்- எத்தகைய வழிகாட்டல்கள்! அவரின் அன்பு, கோபம், கனிவு என எல்லா உணர்ச்சிகளும் கலந்து வெளிப்பட்ட அந்த கணங்கள் என் கண் முன்னால் நிழலாடிக் கொண்டிருந்தன.

வரலாற்றின் வரிகளில் இருந்து அவரது பெயரை எப்படியேனும் அகற்ற வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு, அவரது கனவு சிதைக்கப்பட்ட அதே இடத்தில், அவரது அன்பு மகன் அவரை மீண்டும் அழைத்து வந்து கம்பீரமாக நிலை நிறுத்திய காட்சியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்.

வரலாறு கலைஞரின் பெயரிலாமல் தன் பக்கங்களை ஒரு போதும் நிரப்பிக் கொள்வதில்லை. அவரின் வருகைக்காகத் தான் அது இத்தனை நாள் காத்திருந்தது. அவர் வந்துவிட்டார்.

பின்னால் இருக்கும் கட்டடம் வேண்டுமானால் இன்றைக்கு மருத்துவமனையாக மாறி இருக்கலாம். ஆனால், அவர் நிற்கும் இடம் - புதிய தலைமைச் செயலகம்!” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு விழா.. அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ!