Tamilnadu

பிரதமர் மேடையில் முதிர்ந்த அனுபவம், அரசியல் நாகரீகம்.. தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார் முதலமைச்சர் !

பிரதமர் மோடி அவர்களின் தமிழக வருகையின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அணுகுமுறை முதிர்ந்த அனுபவத்தையும், அரசியல் நாகரீகத்தையும் வெளிப்படுத்தி ஒட்டு மொத்த தமிழகத்தையும் தலைநிமிரச் செய்துள்ளது என ‘தினகரன்’ நாளேடு 28.05.2022 தேதியிட்ட இதழில் ‘உரிமைக்குரல்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது வருமாறு :-

சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாநில உரிமைகளுக்கான குரலை சங்கநாதமாய் எழுப்பியது, பலரை கதிகலங்க வைத்துள்ளது. பிரதமர் மோடி முன்னிலையில் திராவிட மாடல் பற்றியும், இந்தியாவில் தமிழ்நாட்டின் பங்களிப்பு பற்றியும், தமிழர்களின் உரிமைகள் உள்ளிட்ட நமது கோரிக்கைகள் பற்றியும் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்தது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. முந்தைய காலத்தில், அதிமுகவை சேர்ந்த முதல்வர்கள் யாரும் இப்படி துணிச்சலாக பேசியதாக வரலாறு இல்லை. அதேநேரத்தில், மு.க.ஸ்டாலினின் பேச்சு மிக முக்கியமானது, கவனத்துக்குரியது, பாராட்டுதலுக்குரியது, நாகரீகமும், பக்குவமும், அர்த்தமும் கொண்டது என புகழப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியை, மேடையில் வைத்துக்கொண்டு, ஒன்றிய அரசு செய்ய தவறியதையும், செய்ய வேண்டியதையும் முகத்துக்கு நேரே சொன்னது, தமிழக மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது.

பொருளாதாரத்தில் மட்டுமல்ல, சமூக நீதியில், சமத்துவத்தில் முன்னணியில் இருக்கிறோம் என தமிழ்நாட்டின் முக்கியத்துவத்தையும், தனித்தன்மையையும் உரக்கச்சொன்னது தனிச்சிறப்பு. இந்த நாடும், மக்களும் பேசவேண்டிய அரசியல் எது என்ற அஜெண்டாவை மிகச்சரியாக முன்வைத்திருக்கிறார் முதல்வர். நாகரீகமற்ற, மூர்க்கத்தனமான, வெறுப்பும், துவேஷமும் கொண்ட கீழ்மட்ட அரசியலுக்கு அம்மேடையில் இடமில்லாமல் செய்துவிட்டார். பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையிலேயே, ‘‘ஒன்றிய அரசு’’ என்றும், ‘‘ஒன்றிய அமைச்சர்கள்’’ என்றும் அழுத்தமாக சொல்லி, நாம் யார் என்பதை பிரகடனம் செய்தார். தமிழ்நாட்டின் வளத்தை, வலிமையை பிரதமர் நரேந்திர மோடிக்கு புரியவைத்தார். குறிப்பாக, சமூகநீதியை உரக்கச்சொன்னார். செம்மொழி தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க, நீட் தேர்வை ரத்து செய்ய, ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்கிட, கச்சத்தீவை மீட்க, மேடையிலேயே பறைசாற்றினார்.

பிரதமர் மோடி வருகையை புறக்கணிக்காமல், அவரை வரவேற்று, அவரது விழாவில் பங்கேற்று சிறப்பு செய்தது மு.க.ஸ்டாலினின் பெருந்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது. இது, முதல்வரின் நற்பெயருக்கு மேலும் வலுவூட்டி உள்ளது. பிரதமருடன் ஒரே மேடையில் பங்கேற்ற காரணத்துக்காக அவரை புகழவேண்டும் என்பதல்ல, நமது கோரிக்கையை ஆணித்தரமாக பதிவுசெய்யலாம் என்பதையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்து காட்டியுள்ளார். மாநில அரசின் உரிமையை விட்டுக்கொடுக்காமல், தமிழகத்துக்கு வரவேண்டிய நிதி ஆதாரம் உள்ளிட்ட அத்தனை கோரிக்கையையும் மிக அழகாக சுட்டிக்காட்டி, யார் மனதும் புண்படாமல் மிகுந்த பக்குவத்துடன் பேசியுள்ளார். ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், ‘உறவுக்கு கை கொடுப்போம், உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற திமுக அரசின் ஒற்றைக்கொள்கையை, மிக அழுத்தமாக பதியவைத்துள்ளார். இது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதிர்ந்த அனுபவத்தையும், அரசியல் நாகரீகத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. முதல்வரின் இந்த அணுகுமுறை, ஒட்டுமொத்த தமிழகத்தையும் தலைநிமிர செய்துள்ளது.