Tamilnadu

உணவு தேடி வந்த மக்னா யானை.. மின்சாரம் தாக்கி உயிரிழப்பு: ஒருவர் கைது - 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த நல்லாம்பட்டி கிராமத்தில், மக்னா யானை( கொம்பு இல்லாத ஆண் யானை) ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவில் உணவுத் தேடி விவசாய நிலத்திற்கு வந்துள்ளது.

அப்போது, வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வயரில் இருந்து மின்சாரம் தாக்கியதில் மக்னா யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த வந்த வனத்துறையினர் யானையின் உடலை உடற்கூறு ஆய்வு செய்து பின்னர் அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் மக்னா யானை உயிரிழப்புக் குறித்து பாலக்கோடு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் வனப் பகுதியை ஒட்டியுள்ள பகுதியில், வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக வயல் வெளியில் மின்வேலி மற்றும் மின் விளக்குகள் அமைத்தது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சீனிவாசனை, மாரண்டஹள்ளி போலிஸார் கைது செய்தனர். இதுமட்டுமின்றி வனப்பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில், வன விலங்குகளைக் கண்காணிக்கும் பணியில் இருந்த, பாலக்கோடு வனச்சரகர் செல்வம், வனவர் கணபதி, வனக்காப்பாளர் கல்யாண சுந்தரம் ஆகிய மூன்று பேரையும் தற்கால பணி இடைநீக்கம் செய்து மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.

விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், விவசாய நிலத்தை சேதப்படுத்தாமல் இருப்பதற்காகவும் விவசாயிகள் செய்யும் இந்த சட்டவிரோதமான செயலால், வனவிலங்குகள் உயிரிழக்கின்றன. ஏற்கனவே யானைகள் இனம் அழிந்து வந்துக் கொண்டு இருக்கும் நிலையில் , இப்படியான சம்பவத்தால் ஏற்படும் இழப்புகள் இன்னும் வேதனை அளிப்பதாக உள்ளதாக சமூக ஆர்வலளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Also Read: இது என்ன மாதிரியான அஞ்சலி கூட்டம்? இறுதிச்சடங்கில் பெல்லி டான்ஸ் ஆடிய பெண்: நெட்டிசன்களை குழப்பிய வீடியோ!