Tamilnadu

ஷவர்மா விவகாரம் எதிரொலி: நாகையில் அதிரடி ரெய்டில் இறங்கிய உணவுத்துறையினர்.. 310 கிலோ இறைச்சி பறிமுதல்!

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இறைச்சி கடைகளில் அதிரடி ஆய்வு செய்துள்ளனர்.

அதன்படி, நாகப்பட்டினம் அடுத்த வெளிப்பாளையம், திருக்குவளை, கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி புஷ்பராஜ் தலைமையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வெளிப்பாளையம் வண்டிப்பேட்டை பகுதியில் மொத்தமாக விற்பனை செய்யும் சிக்கன் இறைச்சிக்கடை குடோனில் இருந்து கெட்டுப்போன சுமார் 250 கிலோ சிக்கன் இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து திருக்குவளையில் 60 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி என மொத்தம் 310 கிலோ இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இறைச்சிக்கடையின் உரிமையாளர் சேக் தாவுதை எச்சரித்த மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், இது போன்று மீண்டும் கெட்டுப்போன இறைச்சிகளை விற்பனை செய்தால், கடைக்கு சீல் வைக்கப்படும் எனவும் அவர்கள் எச்சரித்து சென்றனர்.

Also Read: கேரள மாணவி சாப்பிட்ட ஷவர்மாவில் ஷிகெல்லா வைரஸ்?.. மாணவியின் உடற்கூறு ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!