Tamilnadu
தேர் தீ பிடித்து எரிந்தது எப்படி? விபத்தின்போது சம்பவ இடத்தில் நடந்ததை விவரித்த தீயணைப்புத்துறை அதிகாரி!
தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர் குருபூஜை 94ஆம் ஆண்டு விழா விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட தேரினை அப்பகுதி மக்கள் வடம் பிடித்து வீதி வீதியாக இழுத்துச் சென்றுள்ளனர். அப்போது மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேரின் மேல் பகுதி உரசியதில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த துயர சம்பவம் குறித்து அறிந்த உடனே ரூ. 5 லட்சம் நிவாரண உதவியை அறிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். மேலும் நேற்று நடந்த சட்டப்பேரவையில் இந்த தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் களிமேடு பகுதிக்கு நேரடியாகவே சென்று உயிரிழந்த 11 பேரின் உடலுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 17 பேரையும் சந்தித்து, ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய சிகிச்சை கொடுக்க வேண்டும் என மருத்துவர்களிடம் வலியுறுத்தினார்.
இந்நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரி பானுபிரியா கூறுகையில், "தேரின் மேல்பகுதி உயரமாக இருந்த காரணத்தால், மேலேசென்ற உயர்மின் கம்பியில் உரசியதாலே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பொதுவாகத் தேர்த் திருவிழா நடைபெறும்போது தீயணைப்புத்துறையிடம் அனுமதி வாங்குவார்கள்.ஆனால் இந்த முறை வாங்கவில்லை. விபத்து அறிந்த உடனே அங்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தோம்" எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!