Tamilnadu

“துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டமசோதா நிறைவேற்றம்” : ஆளுநருக்கு ‘செக்’ வைத்த தமிழ்நாடு அரசு!

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு கூடியது. அப்போது தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மசோதாவை தாக்கல் செய்தார்.

பல்கலைக்கழகத் துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கொண்டுவரப்பட்ட சட்டமுன்வடிவின்மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ஆளுநர் தனக்கு மட்டுமே பிரத்யேகமான உரிமை என்பது போல் செயல்பட்டு, உயர்கல்வியை அளிக்க வேண்டிய பொறுப்பில் உள்ள மாநில அரசை மதிக்காமல் செயல்படும் போக்கு தலைதூக்கியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால், அதன்கீழ் செயல்படும் பல்கலைக்கழகத்திற்குத் துணை வேந்தரை நியமிக்க முடியவில்லை என்பது, ஒட்டுமொத்தப் பல்கலைக்கழக நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்துகிறது. இச்செயல் மக்களாட்சியினுடைய தத்துவத்திற்கே விரோதமாக இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை பல்கலை. உள்பட 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநரிடம் இருந்து அரசுக்கு மாற்றப்படுகிறது. பல்கலைக்கழக துணை வேந்தர்களை அரசு நியமிக்க முடியாமல் இருப்பது உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியால் துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் இருப்பது மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரானது.

அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத துணை வேந்தரை நியமிக்கும் ஆளுநருக்கு வழங்கக்கூடாது என நீதிபதி குழு கூறியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி பூஞ்சி ஆணைய பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ளலாம் என்று தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்கள் கருத்து தெரிவித்துள்ளன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு அளிக்கக்கூடாது என தமிழக அரசு கருத்து தெரிவித்துள்ளது.

அதுமட்டுமல்லாது மசோதாவில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலத்திலேயே துணை வேந்தர் நியமன அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மாநிலத்திலும் துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, வி.சி.க, உள்ளிட்டக் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாடு அரசே துணை வேந்தர்களை நியமிக்கும் சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

Also Read: “ஆளுநரின் செயல் மக்களாட்சிக்கு விரோதமானது.. துணை வேந்தர்கள் நியமனம் மாநில அரசின் உரிமை” : முதல்வர் உரை!