Tamilnadu

“இனி Mask அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. தடுப்பூசி கட்டாயம்” : சுகாதாரத்துறை செயலாளர் கூறியது என்ன?

தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "சென்னை ஐஐடியில் 700 மாணவர்களுக்கு பரிசோதனை செய்ததில் 30 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஐஐடியில் உள்ள 19 விடுதிகளிலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 30 பேரும் கல்லூரி வளாகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது. அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்.

மீண்டும் பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிரித்து வருவதால் முகக்கவசம் அணிவது அவசியமாகும். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் அனைத்து மாவட்ட ஆட்சியர்கர்களிடத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் காலம் தாழ்த்தாமல் தடுப்பூசியை செலுத்தி கொண்டு கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பேருந்துகளில் பயணம் செய்யும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.

பொதுமக்கள் வேலை செய்யும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மண்டல அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்பட்ட வருகிறது என தெரிவித்துள்ளார்.

Also Read: “நவ.1 உள்ளாட்சி தினம் - சிறந்த ஊராட்சிகளுக்கு ரூ.10 லட்சம், உத்தமர் காந்தி விருது” : முதல்வர் அறிவிப்பு!