Tamilnadu

செல்போன் கேட்டதால் தகராறு.. பார்ட்டிக்கு வந்த வாலிபரை தலையில் கல்லை போட்டு கொன்ற இளைஞர்கள்; நடந்தது என்ன?

சென்னை கொருக்குப்பேட்டை பாரதி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் என்கிற அமுக்கா ரமேஷ்(20). இவர் மீது திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் உள்ளன. மேலும் இவர் பாரிமுனை மண்ணடி பகுதியில் லோடுமேனாக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்றிரவு பாரதி நகர் குடியிருப்பு பகுதியில் தன்னுடைய நண்பரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்காக ரமேஷ் சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு அங்கிருந்த சிலர் ரமேஷை சரமாரியாக தாக்கி அவருடைய தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும் இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அங்கிருந்து அலறியடித்து ஓடினர்.

உடனடியாக சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலிஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிஸார் ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ரமேஷை சரமாரியாக தாக்கி கொலை செய்தது அதே குடியிருப்பு பகுதியை சேர்ந்த உதயா என்கிற கருப்பு உதயகுமார் (30), அரவிந்தன்(21) மற்றும் பழைய வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த முஹம்மது ரசூலுல்லாஹ் (22) என தெரியவந்தது. உடனடியாக கொருக்குப்பேட்டை சிவாஜி நகர் மற்றும் ரெங்கநாதபுரம் ரயில்வே தண்டவாள பகுதியில் பதுங்கியிருந்த 3 பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read: லேப்டாப்புக்கு பதில் செங்கலை வைத்து மோசடி.. டெலிவரி பாயை ஏமாற்றிய தம்பதி கைது: போலிஸில் சிக்கியது எப்படி?

பிடிபட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட ரமேஷ், உதயாவின் தம்பியான ராஜேஷின் ரூ.27 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை கடந்த 4 நாட்களுக்கு முன்பு திருடியிருக்கிறார். இப்படி இருக்கையில் குடியிருப்பு பகுதியில் நடந்த ஆனந்த் என்பவரின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு ரமேஷ் வந்தபோது அங்கிருந்த உதயா மற்றும் அவருடைய நண்பர்கள் ரமேஷிடம் செல்போனை கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்கள்.

அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்திருக்கிறது. அனைவரும் குடி போதையில் இருந்ததால் ஆத்திரமடைந்த உதயா மற்றும் நண்பர்கள் ரமேஷை அங்கிருந்த கட்டைகளை கொண்டு சரமாரியாக தாக்கி தரதரவென்று சாலையில் இழுத்துச் சென்று அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் பிடிபட்டதில் உதயா மீது ஒரு கொலை வழக்கும், திருட்டு வழக்குகளும், மற்ற இருவர் மீது திருட்டு வழக்குகள் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலிஸார் பிடிபட்ட 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொருக்குப்பேட்டை பகுதியில் திருடிய செல்போனை கேட்ட போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அசைவ உணவு சாப்பிட்ட மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்.. JNU பல்கலைக்கழகத்தில் மீண்டும் ABVP அட்டூழியம்!