Tamilnadu
”பெட்ரோல் டீசல் விலைக்கேற்ப ஆட்டோ கட்டணங்களை மாற்றியமையுங்கள்” - சென்னை ஐகோர்ட் கூறியது என்ன?
தமிழகத்தில் ஆட்டோக்களுக்கு மீட்டர் பொருத்த வேண்டும் என கடந்த 2013ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்தும்படி உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், அதிக கட்டணம் வசூலித்து பயணிகள் ஏமாற்றப்படுவதை தடுக்க, ஆட்டோக்களில் மீட்டர் பொருத்துவது தொடர்பான அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கடந்த 2013ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி அனைத்து ஆட்டோக்களிலும் எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், பிரிண்டர் பொருத்த அதிக செலவாகும் என்பதால் அதை பொருத்தவில்லை என்றும் தெரிவித்தார்.
இதை மறுத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தியிருந்தாலும் அவை செயல்படுவதில்லை என்றும், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகளிடம் தங்கள் விருப்பம் போல கட்டணம் வசூலிப்பதாகவும் குறை கூறினார்.
இதையடுத்து, மீட்டர் பொருத்தியிருந்தும் அவற்றை செயல்படுத்தாத ஆட்டோக்களை கண்டறிய போக்குவரத்து துறையும், காவல் துறையும் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மீட்டரை செயல்படுத்தாத ஆட்டோக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பெட்ரொல் - டீசல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால், அவற்றின் விலையின் அடிப்படையில், ஆட்டோ உரிமையாளர்களும், பயணிகளும் பயனடையும் வகையில் ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
ஆட்டோ கட்டணங்களை மாற்றியமைக்க நீண்ட நடவடிக்கையை பின்பற்றாமல், பெட்ரோல் - டீசல் விலைக்கு ஏற்ப கட்டணம் தானாக மாற்றும் வகையில் மென்பொருளை பயன்படுத்தலாம் எனவும் நீதிபதிகள், அரசுக்கு யோசனை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்தனர்.
Also Read
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!
-
10.1 கி.மீ நீளம் - 10 நிமிட பயணம்! : ஜி.டி.நாயுடு மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!