Tamilnadu

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம்.. முக்கிய சாட்சியான வக்கீல் திடீர் தற்கொலை.. மிரட்டல் பயம் காரணமா?

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் முக்கிய சாட்சியான வழக்கறிஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு இரட்டை இலை சின்னம் பெற்றுத்தரவேண்டி அ.ம.மு.க பொதுச் செயலாளர் தினகரன், கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் கொடுத்தது அம்பலமானது.

சுகேஷ் சந்திரசேகர் அளித்த வாக்குமூலத்தில், தினகரன் தனக்கு முன்பணமாக ரூ.2 கோடி கொடுத்ததாக் கூறியுள்ளார். இதனையடுத்து அமலாக்கத்துறையினர் வரும் 8ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு தினகரனுக்கு சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை அடுத்த திருவேற்காடு சுந்தரசோழபுரம் பகுதியை சேர்ந்த 31 வயதான கோபிநாத், பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் பா.ம.க.,வின் திருவேற்காடு பகுதி அமைப்பு செயலராகவும் பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக கோபிநாத்தை தொடர்பு கொண்ட அமலாக்கத்துறையினர், விசாரணைக்கு டெல்லி வருமாறு கூறியதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், கோபிநாத் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடலை மீட்ட திருவேற்காடு போலிஸார், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஐதராபாத் மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து குதித்து இளம்பெண் தற்கொலை.. பொதுவெளியில் நடந்த விபரீதம்!