கோப்புப்படம்
Tamilnadu

கோபப்பட்டு தன்னைத்தானே காட்டிக்கொடுத்த கடத்தல் பயணி.. உள்ளாடையில் இருந்து தங்கத்தை எடுத்த சென்னை கஸ்டம்ஸ்

துபாயில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமானநிலைய சுங்க துறையினர் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையைச் சேர்ந்த 32 வயது ஆண் பயணி ஒருவர் தன்னிடம் சுங்கத் தீர்வை செலுத்துவதற்கான பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, அவசரமாக கிரீன் சேனல் வழியாக வெளியில் சென்று கொண்டிருந்தார்.

சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், நான் அவசரமாக செல்ல வேண்டும். என்னிடம் சுங்கத்தீா்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டேனே? பின்பு எதற்காக நிறுத்தி விசாரிக்கின்றீா்கள்? என்று ஆத்திரத்துடன் கேட்டாா். இது சுங்கத்துறையினருக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதனை அடுத்து அந்த பயணியை சுங்க அலுவலகத்திற்குள் அழைத்து வந்து, அவருடைய உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. ஆனாலும் சந்தேகம் தீராமல் அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக சோதனையிட்டனர்.

அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 2 பாா்சல்களை கண்டுபிடித்தனர். அதை பிரித்து பார்த்த போது அதனுள் 840 கிராம் தங்கப்பசை இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூபாய் 40 லட்சத்து எட்டாயிரம்.

இதையடுத்து சுங்கத்துறையினா் தங்கப்பசையை பறிமுதல் செய்தனர். அதோடு தங்கப்பசையை கடத்தி வந்த சென்னை பயணியை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: கேரளாவில் வீட்டு வேலைக்காக சென்றுவிட்டு குழந்தையை கொடுமைப்படுத்திய மூதாட்டி.. CCTV மூலம் அம்பலம்!