Tamilnadu

“பெண் கவுன்சிலர்கள் பணியில் வேறு யாரும் தலையிட்டால் நடவடிக்கை” : எச்சரித்த சென்னை மேயர் பிரியா!

தமிழ்நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து சென்னை மாநகராட்சி மேயராக தி.மு.கவைச் சேர்ந்த பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டார்.

மார்ச் 4ஆம் தேதி சென்னை மாநகராட்சியின் மேயராக பிரியா ராஜன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து மாநகராட்சிப் பணிகள் வேகமெடுத்துள்ளன.

சென்னையில் நடந்து வரும் மழைநீர் வடிகால் பணிகளை உடனடியாக தொடங்கி பருவ மழைக்கு முன் முடிக்கவேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளையும், ஒப்பந்ததாரர்களையும் துரிதப்படுத்தி வருகிறார்.

இதைத்தொடர்ந்து, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சென்னை மேயர் பிரியா, சென்னை மாநகராட்சி வழங்கும் கட்டட அனுமதி அடிப்படையில் மட்டுமே கட்டடம் கட்டப்பட வேண்டும். மாநகராட்சி விதிகளை மீறி கட்டிடம் கட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

இதற்கிடையே பெண் கவுன்சிலர்களின் கணவர் அல்லது குடும்பத்தினர் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு செயல்படுவதாக விமர்சனம் எழுந்ததைத் தொடர்ந்து இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை மேயர் பிரியா.

இந்நிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகத்தை சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் திறந்துவைத்தார்.

தொடர்ந்து, மேயர் பிரியா ராஜன் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்துப் பேசுகையில், “கவுன்சிலர் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டுள்ளதோ அவர்கள்தான் அந்தப் பணியை செய்ய வேண்டும். அதையும் மீறி, எவரேனும் தவறாக அவர்களை பயன்படுத்தினாலோ அல்லது பெண் கவுன்சிலர்களின் குடும்பத்தினர் அவர்களை தவறாக வழிநடத்தினாலோ அவர்களின் மீது தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும்.

கவுன்சிலர்கள், மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களது பணி என்ன என்பது தெரியும். அவர்களுக்கு தெரியாத பட்சத்தில் தேவையான அறிவுரைகளும் வழங்கப்படும்.” எனத் தெரிவித்தார்.

Also Read: கும்மியாட்டம் ஆடிய பெண் மேயர்... அசந்துபோன பார்வையாளர்கள்! #Video