Tamilnadu

தமிழ்நாட்டில் கொரோனா 4வது அலை எப்போது வரும்? : அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல் !

தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சனிக்கிழமைதோறும் 25 தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் இன்று 26 தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து சென்னை ஆலந்தூர் மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், அரியலூர், கோவை ஆகிய 7 மாவட்டங்களில் 100% கொரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

அதேபோல் தமிழ்நாடு முழுவதும் 50 லட்சத்து 61 ஆயிரத்து 287 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 1 கோடியே 34 லட்சத்து 97 ஆயிரத்து 690 பேருக்கு இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தவேண்டியுள்ளது.

இரண்டாவது தடுப்பூசி செலுத்தாதவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா 4வது அலை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதனைத் தடுக்க மருத்துவ கட்டமைப்பு தயாராக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அனைத்து தரப்பினருக்கும் பயன்தருவதாக அமைந்துள்ளது”: ரகுராம் ராஜன் பாராட்டு!