Tamilnadu

தொழில் முதலீடு.. புதிய வேலை வாய்ப்புகள்.. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையில் அமைந்த துபாய் பயணம் !

தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தர வேண்டுமென்பதே முதல்வரின் துபாய் பயணத்தின் தொலை நோக்குப்பார்வை என ‘தினகரன்’ நாளேடு 25.03.2022 தேதியிட்ட இதழில் ‘வெற்றி பயணம்’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிட்டுள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நாளில் இருந்து தனது சிந்தனை, செயல் முழுக்க தமிழ், தமிழக மக்கள், தமிழக வளர்ச்சி என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டு திட்டங்களை வகுத்து அமல்படுத்தி வருகிறார். இந்நிலையில், துபாயில் உலக கண்காட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இக்கண்காட்சி இம்மாதம் 31ம் தேதி நிறைவடைகிறது. இந்த கண்காட்சியில் உள்ள தமிழக அரங்கில் இந்த வாரம் தமிழக வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. இதில் கலந்து கொண்டு தமிழக அரங்கினை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்கிறார்.

தொழில்துறை, மருத்துவம், சுற்றுலா, கலை, கலாச்சாரம், கைத்தறி, கைவினைப்பொருட்கள், ஜவுளி, தமிழ் வளர்ச்சி, தகவல், மின்னணுவியல், தொழிற்பூங்காக்கள், உணவு பதப்படுத்தல் ஆகிய முக்கிய துறைகளில் தமிழத்தின் சிறப்பை உலகிற்கு பறைசாற்றும் வகையில் காட்சிப்படங்கள் அந்த அரங்கில் திரையிடப்பட இருக்கிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மோட்டார் வாகனங்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள், மின்சார வாகனங்கள், மின்னணுவியல் சாதனங்கள், காற்றாலைகள் உள்பட பல உற்பத்தி பொருட்களின் மாதிரிகளும் காட்சியகப்படுத்தப்பட உள்ளன. இந்த அரங்கை பார்வையிடுவோர் தமிழகத்தின் ஒட்டுமொத்த சிறப்பினை அறிந்துகொள்ள வழிவகை செய்யும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட 192 நாடுகள் பங்கேற்றுள்ள இக்கண்காட்சியில் ஒவ்வொரு நாட்டுக்கும் பிரத்யேக அரங்குகள் உள்ளன. இந்த கண்காட்சியை 2.50 கோடி பேர் பார்வையிடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக முதல்வரின் பயணம் தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமைய இருக்கிறது. வெளிநாட்டு வர்த்தகம், பொருளாதாரம் போன்ற முக்கிய துறை அமைச்சர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இருக்கிறார். இதே போன்று முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள், வர்த்தக, தொழில் சங்க தலைவர்களுடன் சந்தித்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில் ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். மேலும் அபுதாபி, துபாயில் புலம்பெயர்ந்த தமிழர்களையும் சந்தித்து பேசுகிறார்.

முதல்வருடன் தொழில்துறை அமைச்சர், தொழில் துறை செயலாளர், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் உள்பட ஒரு குழு பயணித்துள்ளது. தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற தனது துபாய் பயணம் உதவும் என்று தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் கூறியுள்ளார். எனவே, இந்த பயணத்தின் மூலம் தமிழகத்துக்கு பல்வேறு தொழில் முதலீடுகளை கொண்டு வந்து தமிழகத்தை ஒரு முன்னணி மாநிலமாக வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வார் என்று உறுதியாக கூறலாம்.

தமிழகத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்ற முதல்வரின் தொலை நோக்கு பார்வையில் இந்த துபாய் பயணம் அமைந்துள்ளது. எனவே, தமிழக முதல்வருக்கும், அவருடன் பயணித்த குழுவுக்கும் இந்த பயணம் வெற்றிப்பயணமாக அமைய வேண்டும் என்று தமிழக தொழில் துறையினர் மற்றும் மக்கள் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: “தமிழின் பெருமைகளை காட்சிப்படுத்திய உலகின் மிக உயர்ந்த கட்டிடம்” : சர்ப்ரைஸ் கொடுத்த துபாய் தமிழர்கள் !