Tamilnadu

“இப்போதான் எங்களுக்கு நல்லது நடக்குது” : முதல்வரை மனம் நெகிழ்ந்து பாராட்டிய நரிக்குறவர் இன மக்கள்!

பல ஆண்டுகளாக அரசின் எந்த ஒரு சலுகையும் கிடைக்காத நிலையில் தற்போது முதல்முறையாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பால் தங்களுக்கு உதவி கிடைத்துள்ளதாக நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் பெற்ற நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதியின்படி 5 சவரனுக்கு உட்பட்டு நகைக் கடன் பெற்றிருந்தவர்களின் கடனை தள்ளுபடி செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

அதன்படி சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றிருந்தவர்களுக்கு கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ் மற்றும் நகைகளை திருப்பி வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மம்பாளையம் பகுதியில் உள்ள கூட்டுறவு சங்கத்தில் நகைகளை வைத்து கடன்பட்டிருந்த நரிக்குறவர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் மற்றும் நகைகள் திருப்பி கொடுக்கப்பட்டன.

நகைகளை பெற்றுக்கொண்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் கூறும்போது, “கடந்த பல ஆண்டுகளாக தங்களது சமுதாயத்திற்கு எந்தவித அரசின் சலுகைகளும் கிடைக்கப்பெறாத நிலையில் தற்போது இந்த ஆட்சியில் எங்கள் சமுதாயத்திற்கு பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக தற்போது நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பலன் அளிக்கும். எங்களைப் போன்று விளிம்பு நிலையிலுள்ள சமுதாயத்தினருக்கு உதவிடும் வகையில் ஆட்சி நடத்தி வரும் தமிழக முதலமைச்சர் பல ஆண்டு காலம் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்” எனக்கூறி உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளனர்.

Also Read: “விருதுநகர் பாலியல் வன்முறை வழக்கில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை பெற்று தரப்படும்”: முதல்வர் உறுதி!