Tamilnadu

ஜெராக்ஸ் மிஷின், ஸ்கேனிங் மிஷின் வைத்து கள்ளநோட்டு தயாரித்த கும்பல்: மேலும் 4 பேரை மடக்கி பிடித்த போலிஸ்!

புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் உள்ள தனியார் மதுக்கடை ஒன்றில் ரூ.500 கள்ளநோட்டு கொடுத்து மதுபானங்கள் வாங்க முயன்றது தொடர்பாக, புதுச்சேரி பிள்ளைத்தோட்டத்தைச் சேர்ந்த ஜெயபால், சாரம் தென்றல் நகரைச் சேர்ந்த மனோஜ்(எ)மனோஜ்குமார் மற்றும் இவர்களுக்கு கள்ளநோட்டுகளை வழங்கிய அரும்பார்த்தபுரம் பேட் மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்த சரண், ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் கமல் ஆகியோரை போலிஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, ரூ.2.42 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சென்னை எர்ணாவூரைச் சேர்ந்த பிரதீப்குமார் என்பவரும் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் கூடுதல் விசாரணைக்காக உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலிஸார் கமல், பிரதீப்குமார் இருவரையும் நீதிமன்ற அனுமதி பெற்று 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

மேலும் இவர்கள் இருவரையும் போலிஸார் சென்னை அழைத்துச் சென்று சோதனை நடத்தி, தீவிரமாக விசாரித்தனர். இதில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள்கொடுத்த தகவலின் பேரில் செங்கல்பட்டு மாமண்டூரைச் சேர்ந்த ரகு(எ) ரகுபதி(35), சென்னை ராயபுரம் நாகூர்மீரான்(30), இவரது சசோதரர் தமீன் அன்சாரி(28), பழைய வண்ணாரப்பேட்டை சரன்(எ) சரண்ராஜ்(30) ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் ரகு வீட்டிலிருந்து கள்ள நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட ஜெராக்ஸ் மிஷின், ஸ்கேனிங் மிஷின் உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேரும் புதுச்சேரி அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது, இவ்வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலிஸார் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வருகின்றனர்.

Also Read: புதுச்சேரியில் கட்டுக்கட்டாக சிக்கிய கள்ளநோட்டு.. தட்டித்தூக்கிய போலிஸ் - மர்ம கும்பல் பிடிபட்டது எப்படி?