Tamilnadu

அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் எனக்கூறி ரூ.11 லட்சம் மோசடி : சூப்பர்வைசரை கைது செய்து போலிஸ் விசாரணை!

கரூர் மாவட்டம் கடவூர் காளைபட்டி அருகே உள்ள சின்னாண்டிபட்டியைச் சேர்ந்தவர் தாமஸ் ஆல்பர்ட் (வயது 40). இவர் கூடலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ள நல்லகவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த்குமார் என்பவரிடம் சமீபத்தில் இவருக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.

ஸ்பின்னிங் மில்லில் சூப்பர்வைசராகப் பணியாற்றி வந்த ஆனந்த்குமார் கடந்த 2018ஆம் ஆண்டு ஜுலை மாதத்தில் தன்னை அ.தி.மு.க முன்னாள் கல்வி அமைச்சரின் உறவினர் என தாமஸ் ஆல்பர்ட்டிடம் அறிமுகமானதாக கூறப்படுகிறது. மேலும் தன்னால் அரசு வேலைகளைப் பெற்றுத்தர முடியும் எனவும் உறுதியளித்ததாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஆனந்த்குமாரை நம்பி, ரூ. 7 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்துள்ளார் தாமஸ் ஆல்பர்ட். இதேபோல் ராஜா என்பவர் ரூபாய் ஒரு லட்சமும், சுரேஷ் என்பவர் ரூபாய் ஒரு லட்சத்து 10 ஆயிரமும், மருதமுத்து என்பவர் ரூபாய் 2 லட்சத்து 55 ஆயிரமும் ஆனந்த்குமாரிடம் கொடுத்துள்ளார். இதன்மூலம் 4 பேரிடமும் மொத்தம் ரூ.11 லட்சத்து 75 ஆயிரம் பெற்றுக்கொண்டு ஆனந்த்குமார் ஏமாற்றியுள்ளார்.

இதனையடுத்து தாமஸ் ஆல்பர்ட் கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸில் புகார் ஒன்றையும் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில், கரூர் மாவட்ட குற்றப்பிரிவு போலிஸ் சப்இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி வழக்குபதிவு செய்து விசாரணை செய்தார். விசாரணைக்கு பின்னர் ஆனந்த்குமாரை கைது செய்துள்ளனர்.

Also Read: வேளாண்மை துறை பட்ஜெட் : புதிதாக சேர்க்கப்பட்ட முக்கிய அம்சங்கள் : கவனிக்க வேண்டிய 10 திட்டங்கள் இதோ !