Tamilnadu

ஒன்றோ இரண்டோ அல்ல.. 10 முறை தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை: வாள்வீச்சில் அசத்தும் பவானி தேவி!

பஞ்சாப் மாநிலம் அம்ரிஷ்டரில் 32வது தேசிய அளவிலான வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர்.

நட்சத்திர வீராங்கனையான தமிழகத்தின் பவானி தேவி இந்தத் தொடரில் saber பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இறுதிப்போட்டியில் மணிப்பூர் வீராங்கனையை 15-6 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதன் மூலம் தேசிய அளவிலான வாள்வீச்சு போட்டியில் 10வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்ததுடன் தொடர்ந்து இந்தியாவின் தலைசிறந்த வீராங்கனையாகவும் வலம்வருகிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று, ஒலிம்பிக் தொடரில் பங்கேற்ற முதல் இந்திய வாள்வீச்சு வீராங்கனை என்ற வரலாற்றை படைத்தார்.

அடுத்ததாக, 2024ல் பிரான்சில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் தொடருக்கு தன்னை தீவிரமாகத் தயாராகி வரும் பவானி தேவிக்கு இந்த சாம்பியன் பட்டம் நம்பிக்கை தரும் உந்துகோலாக அமைந்துள்ளது. 10வது முறை தேசிய பட்டத்தை வசப்படுத்திய பவானி தேவிக்கு பிரபலங்கள் வாழ்த்து பதிவிட்டு வருகின்றனர்.

Also Read: ‘WTC’ கிரிக்கெட் வரலாற்றில் முதல் வீரர்.. புதிய மைல்கல்லை எட்டி வரலாற்று சாதனை படைத்த அஸ்வின் !