Tamilnadu

உத்தரவு மட்டும் போடும் அரசல்ல இது... போக்குவரத்து துறை ஆணையை மீறிய ஓட்டுநர், நடத்துனர் சஸ்பெண்ட்!

தரமற்ற உணவகத்தில் அரசுப் பேருந்தை நிறுத்தியதாக பயணிகள் அளித்த புகாரின் பேரில் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் கோட்டம் கடலுார் மண்டலம் விருதாச்சலம் கிளை - 1 மூலம் இயக்கப்படும் '171 ஜி' பஸ் சேலம் - கடலுார் விருதாச்சலம் மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

இந்தப் பேருந்து கடந்த 10ஆம் தேதி கடலுார் அருகே போக்குவரத்துக்கழக அனுமதி பெறாத தரமற்ற தனியார் உணவகத்தில் நிறுத்தப்பட்டதாக பயணியர் புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து கிளை மேலாளர் விசாரித்து அறிக்கை அளித்தார். அதன்படி நடத்துனர் மற்றும் ஓட்டுநரை பணியிடைநீக்கம் செய்து கடலுார் மண்டல பொது மேலாளர் உத்தரவிட்டார்.

முன்னதாக, நெடுஞ்சாலைகளில் இருக்கும் சில தனியார் உணவகங்களில் தரமற்ற உணவுகள் மற்றும் கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பதாக பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனால் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தரமற்ற உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தது போக்குவரத்துத்துறை.

உத்தரவு போட்டதோடு நிற்காமல் அதை மீறிய ஓட்டுநர், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பயணிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Also Read: “தரமற்ற பொருட்கள் விற்றால்..” : விக்கிரவாண்டி அருகே மோட்டல்களில் அதிரடி ஆய்வு - சிக்கிய உணவுப்பொருட்கள்!