Tamilnadu

‘நிராகரித்த இந்தியா’.. உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழ்நாட்டு மாணவர் : உளவுத்துறை விசாரணை !

உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் இரண்டு வாரங்களாக தொடர் தாக்குதல் தொடுத்து வருகிறது. இதனால் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் தங்களின் சொந்த மண்னை விட்டு அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த போர் காரணமாக உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்டு நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை உக்ரைனில் மருத்துவம் படித்துவந்த மாணவர்களில் 17 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர். மேலும், மற்றவர்களையும் மீட்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தியர்களை மீட்பது குறித்து நேற்று தொலைப்பேசியில் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன், ரஷ்ய அதிபர்களிடம் பேசியுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவர் கோவை மாவட்டம் துடியலூர் பகுதியைச் சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் ஆவார்.

இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருகிறார். தற்போது நான்காம் ஆண்டு படித்து வரும் இவர் உக்ரைனில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் என்ற துணை இராணுவத்தில் இணைந்துள்ளார்.

இதனை அறிந்த இந்திய உளவுத்துறை கோவையில் உள்ள மாணவர் வீட்டில் ஆய்வு செய்து அவரது பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஊருக்கு விர விரும்பவில்லை என மாணவர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மாணவர் சாய்நிகேஷ் ரவிசந்திரன் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பித்துள்ளார். ஆனால் உயரம் குறைவாக இருந்த காரணத்தால் அவரால் இந்திய ராணுவத்தில் சேரமுடியவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் அமெரிக்க ராணுவத்திலும் சேர முயன்றுள்ளார். அங்கும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

சிறு வயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆணை தொடர்ந்து நிறைவேறாத நிலையில், தற்போது ரஷ்யா - உக்ரைனுக்கு இடையே போர் நடந்து வரும் நிலையில், மாணவர் சாய்நிகேஷ் ரவிசந்திரனுக்கு உக்ரைன் ராணுவத்தில் சேரக வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்நிலையில்தான் அவர் உக்ரைனில் உள்ள ஜார்ஜியன் நேசனல் லிஜியன் என்ற துணை இராணுவத்தில் இணைத்து ரஷ்ய ராணுவ வீரர்களை எதிர்த்தாக்குதல் நடத்தி வருகிறார்.

Also Read: அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 17 நாடுகளை 'Unfriend’ செய்த ரஷ்யா... காரணம் என்ன?