Tamilnadu
அமெரிக்காவின் தடை.. ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கான ஏற்றுமதி கடும் பாதிப்பு - பின்னடைவை சந்திக்கும் இந்தியா !
உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக்கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றனர்.
10 நாட்களாக நடைபெற்று வரும் இந்தப் போரால் இரு நாட்டைச் சேர்ந்த ஏராளாமானவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பொதுமக்களிலும் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் இருநாடுகளிடையே நடந்த இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில், மீட்பு பணிகளுக்காக உக்ரைனில் தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்படுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
முன்னதாக, உக்ரைன் உடனான மோதலைக் காரணமாக வைத்து, ரஷ்யா மீது, அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. பதிலடியாக இந்த நாடுகள் மீது ரஷ்யாவும் தற்போது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடை காரணமாக, ரஷ்யா மற்றும் அர்மீனியா, அஜெர்பைஜான், பெலாரஸ், ஜார்ஜியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மால்டோவா, தஜிகிஸ்தான், உக்ரைன், உஸ்பெகிஸ்தான் உள்ளிட்ட முன்னாள் சோவியத் நாடுகளுக்கு (Commonwealth of Independent States - CIS), இந்திய ஏற்றுமதியாளர்கள் உடனடியாக 50 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டுள்ளனர்.
உக்ரைன் மீதான மோதலை அடுத்து, அரசு நடத்தும் ஏற்றுமதி கடன் உத்தரவாதக் கழகம் (Export Credit Guarantee Corporation of India) கடந்த வாரம் ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கான பாதுகாப்பைத் திரும்பப்பெற்றது. தொழில்துறை புள்ளி விவரங்களின்படி இந்தியா ஆண்டு தோறும் 250 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை ரஷ்யாவுக்கும், 150 கோடி டாலர் மதிப்பிலான பொருட்களை முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளுக்கும் (CIS) ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மட்டும் மாதம்தோறும் சுமார் ரூ. 2,260 கோடி மதிப்புள்ள தொழில்நுட்பம், வீட்டு உபயோக, ஆயத்த ஜவுளிகள் ஏற்றுமதியாகின்றன. அதேபோல, உக்ரைனுக்கு ரூ.190 கோடி மதிப்பிலான ஆடைகள் ஏற்றுமதியாகின்றன. எரிபொருள், வர்த்தக கட்டுப்பாடுகள் தீவிரமடையும் பட்சத்தில் ஒட்டு மொத்த ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்திய ஜவுளிகள் ஏற்றுமதியாவதில் சிக்கல் ஏற்பட்டு, ஜவுளித்துறையில் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து சுமார் 40 சதவிகிதம் ஆடை கள் ஏற்றுமதியாகின்றன. ஆனால், ரஷ்ய வங்கிகள் மீதான பொருளாதார தடைகள் மற்றும் பால்டிக் பிராந்தியத்தில் உள்ள துறைமுகங்களில் ஏற்படும் இடையூறுகள் போன்றவை காரணமாக இந்திய ஏற்றுமதியாளர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளனர். ரஷ்யா, உக்ரைன் மற்றும் அதனை சுற்றியுள்ள சி.ஐ.எஸ் நாடுகளுக்கு, பிற நாடுகள் ஏற்றுமதி செய்வதிலும், அங்கிருந்து பிற நாடுகளுக்கு இறக்குமதி செய்வதிலும் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.
இதனால் பணவீக்கம் மேலும் மோசமடையும் என்று ‘மொண்ட லெஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது. காட்பரி டெய்ரி மில்க் மற்றும் ஓரியோ பிஸ்கட் தயாரிப்பு நிறுவன மான ‘மொண்டலெஷ்’ இதுதொடர்பாக மேலும் கூறுகையில், கோதுமை முதல் எண்ணெய் சரக்கு விநியோக சங்கிலிகள் சீர்குலைந்து போவதால் பணவீக்க அழுத்தங்கள் மோசமடையும் என்று தெரிவித்துள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!