Tamilnadu

'நான் உன்னோட ரசிகன் தம்பி..' : பள்ளி மாணவன் பதிலால் மெய்சிலிர்த்த DGP சைலேந்திரபாபு!

தமிழ்நாட்டில் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள காவலர் அருங்காட்சியகத்தில் சாலை விபத்துகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் பங்கேற்றனர். இவர்களுக்கு காவல்துறை சார்பில் தலைக்கவசம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட டி.ஜி.பி சைலேந்திரபாபு சாலை விபத்துகளில் ஏற்படும் விளைவுகள் குறித்து பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது சாலை விபத்தில் சிக்கி மோமாவிற்கு சென்றால் எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என மாணவர்களிடம் சைலேந்திரபாபு கேள்வி ஒன்றை எழுப்பினார்.

இதற்கு சந்தோஷ் என்ற மாணவர்,"வாழ்க்கையே பறிபோய்விடும், குடும்பமே கஷ்டத்திற்குத் தள்ளப்படும்" என கோமாவால் ஏற்படும் இழப்புகள் குறித்துத் தெளிவாகப் பதிலளித்தார். மாணவரின் இந்த பதிலை கேட்டு மெய்சிலிர்த்த சைலேந்திரபாபு, 'நான் உன் ரசிகன்' எனக் கூறி மாணவருக்கு பரிசு வழங்கினார்.

மேலும் தலைக்கவசம் அணிவதன் மூலம் பெரும்பாலான உயிரிழப்புகளை நாம் தவிர்க்க முடியும் என டி.ஜி.பி சைலேந்திரபாபு கூறினார். பின்னர் இந்நிகழ்வில் சாலை விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் உருவாக்கிய கண்காட்சியை டி.ஜி.பி சைலேந்திரபாபு பார்வையிட்டார்.

Also Read: “பா.ஜ.கவைத் தவிர உலகில் எவரும் இதைக் கொண்டாட மாட்டார்கள்!” : சுப.வீரபாண்டியன் கிண்டல்!