Tamilnadu

தமிழ்நாட்டு வீரர்களை ரயிலிலிருந்து இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகர்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் தேசிய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து வீரர்கள் போல் வால்ட் பிரிவில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் பவித்ராஎன்ற வீராங்கனை தங்கம் வென்று ஆசியப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்ற வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர்.

இதையடுத்து ஐந்து வீரர்களும் திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில் சேலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டிக்கெட் பரிசோகதர் சுஜாதா என்பவர் போல் வால்ட் உபகரணத்தை எப்படி ரயிலில் ஏற்றினீர்கள் என வீரர்களிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதற்கு, அவர்கள் நாங்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார். ஆனால் அவர்கள் பேச்சைக் கேட்காத அவர் ஐந்து பேரையும் கொல்லம் ரயில் நிலையத்திலேயே இறக்கி விட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த வீரர்கள் நடந்த சம்பவம் குறித்து இணையத்தில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதைப்பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்து விளையாட்டு வீரர்களை நடுவழியில் இறக்கிவிட்ட டிக்கெட் பரிசோதகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Also Read: உக்ரைனில் தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களை மீட்க... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!