Tamilnadu

உக்ரைன் - ரஷ்யா போர்.. பங்கு சந்தையில் நஷ்டம்.. ஆராய்ச்சி மாணவர் தூக்கிட்டு தற்கொலை - பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் தனது குடும்பத்தோடு மதுரையில் வசித்து வருகிறார். இவரது மகன் பிரவீன் டேனியல் (31). இவர் பிள்ளைச்சாவடி அன்னை நகர் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்தபடி, புதுவைப் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பொருளாதார ஆய்வு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அவரது அறை திறக்கப்படாமல் இருந்தது. மேலும் தூர்நாற்றமும் வீசியது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காலாப்பட்டு போலிஸாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் கதவை உடைத்து, உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் பிரவீன் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது பிரவீன் தங்கியிருந்த அறையில் போலிஸார் சோதனை நடத்தியபோது, அங்கிருந்த மேஜையில் தன்னுடைய பெற்றோர் செல்போன் எண்ணை எழுதி வைத்திருந்தார். அதன் மூலம் போலிஸார் அவரது தந்தை ஸ்ரீதர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் உடலை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக அனுப்பி வந்தனர். இதனையடுத்து போலிஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலிஸார் நடத்திய விசாரணையில், புதுவையில் தங்கி புதுவை பல்கலைக்கழகத்தில் படித்து வந்த பிரவீன் டேனியல் பங்குச் சந்தையில் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளார். இதில் ஏற்பட்ட திடீர் நஷ்டத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையே போர் நடந்துவருவதால், உலகம் முழுவதுமே பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தச் சூழலில், பங்கு சந்தையில் ஏற்பட்ட நஷ்டத்தால் புதுவை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெள்ளாவின் மகன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. 26 வயதில் நேர்ந்த சோகம்!