Tamilnadu

ரூ.2.75 கோடி மோசடி.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட 4 பெண்கள் கைது - நடந்தது என்ன?

விருதுநகரில் வைப்பு தொகைக்கு அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி 2.75 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இனிகோ வங்கி என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வைப்பு தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறி 2.75 கோடி வரை மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட நான்கு பேரை விருதுநகர் பொருளாதார குற்ற பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் ஜான் செல்வராஜ், விக்னேஷ் குமார் (31), இவரது மனைவி மணிமேகலை (28,) மணிமேகலையின் சகோதரி சர்மிளா (25) மற்றும் சிவகாசி ரிசர்வ் லயனை சேர்ந்த கோகில வாணி ஆகிய நால்வரும் சேர்ந்து சிவகாசி தென்றல் நகரில் இனிக்கோ வங்கி என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளனர்.

இவர்கள் வைப்பு தொகைக்கு அதிக வட்டி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி 100 க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். ஆனால் முதலீடு செய்த பணம் பெரும்பாலானோருக்கு திரும்பி தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் ராஜபாளையத்தை சேர்ந்த விஷ்ணுபிரியா என்பவர் விருதுநகர் பொருளாதார குற்ற பிரிவு அலுவலகத்தில் 14 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இனிகோ வங்கி இயக்குநர்கள் ஜான் செல்வராஜ், விக்னேஷ் குமார், மணிமேகலை, சர்மிளா, கோகில வாணி, ஆகியோர் மீது புகார் அளித்தார்.

அதன் பேரில் விருதுநகர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 100க்கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து இதுபோல் ஏமாந்தது போலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

இதனடிப்படையில் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில் விக்னேஷ் குமார், அவரது மனைவி மணிமேகலை, மணிமேகலையின் சகோதரி சர்மிளா, மற்றும் கோகிலவாணி ஆகிய நால்வரை இன்று மாலை விருதுநகர் பொருளாதார குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள ஜான் செல்வராஜை தேடி வருகின்றனர்.

Also Read: மின் இணைப்பை துண்டித்து கொள்ளை முயற்சி.. வாலிபருக்கு அரிவாள் வெட்டு - கொள்ளையர்கள் அட்டகாசம்!