Tamilnadu

’நாங்க மீடியா’ எனக்கூறி டீக்கடை நடத்தும் மாற்றுத்திறனாளியை தாக்கிய போலி நபர்கள்; காப்பு மாட்டிய போலிஸ்!

மாதவரம் பொன்னியம்மன்மேடு பிரதான சாலையில் டீ கடை வைத்து நடத்தி வருபவர். ராஜ்குமார் (28) .பீகார் மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான இவர் அவரது மனைவியுடன் கடந்த 7 வருடமாக அப்பகுதியில் சொந்தமாக கடை வைத்து நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் நேற்று மாலை இவரது கடைக்கு இருவர் டீ குடித்துவிட்டு பணம் கொடுக்கவில்லை. இதை கேட்டதற்கு நாங்கள் பத்திரிகை நிருபர்கள் எங்களிடமே காசு கேட்கிறாயா என கூறி வாய் தகராறில் ஈடுபட்டு பின்னர் கணவன் மனைவி இருவரையும் தாக்கி கடையில் இருந்த பிஸ்கெட் பாட்டில்களையும் போட்டு உடைத்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மாதவரம் காவல் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் உள்ளிட்ட போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தகராறில் ஈடுபட்ட இருவரை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் மாதவரம் பால்பண்ணை அலெக்ஸ் நகரை‌ சேர்ந்தவர் தியாகராஜன் (35), நேதாஜி நகரை சேர்ந்த லாரி டிரைவர் சரவணன் (47) என்பதும், இருவரும் போலியான பிரஸ் அட்டையை வைத்துக்கொண்டு பத்திரிகையில் பணிபுரிவதாக அரசு அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் பிரச்சனையில் ஈடுபடுவர் என கூறப்படுகிறது.

மேலும் இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து தியாகராஜன், சரவணன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

Also Read: இளம் பெண் கொடூரக் கொலை.. மகனையே போலிஸில் ஆதாரத்துடன் காட்டிக் கொடுத்த தந்தை: நடந்தது என்ன?