Tamilnadu

பிரச்சாரத்திற்கு அனுமதி இல்லை.. பாஜக நிர்வாகியின் மனு தள்ளுபடி : ₹10000 அபராதம் விதித்து ஐகோர்ட் உத்தரவு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் வார்டு வாரியாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை போத்தனூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பிரசாரம் மேற்கொள்ள சென்றார். அப்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி போலிஸார் அவரை அங்கிருந்து புறப்படக் கூறினர். ஆனால், தான் பிரசாரம் மேற்கொள்ள வந்திருப்பதாகவும், இதை தடுக்க கூடாது என்றும் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக போலிஸார் அவரை கைது செய்து போலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற போது அவர் 3-வது முறையாக கைது செய்யப்பட்டார். இந்நிலையில், தன்னை பிரச்சாரத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலூர் இப்ராஹிம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பரத் சக்கரவர்த்தி ஆகியோருடன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம், மனுதாரருக்கு ஏற்கனவே பலமுறை கடிதம் அனுப்பியுள்ளதாகவும் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும், பதட்டமான பகுதிகள் செல்லக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் வழக்கில் பல தகவல்களை மறைத்து வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கைத் தள்ளுபடி செய்து பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

Also Read: “மனு தள்ளுபடி.. அவரை ஏன் வெளியே விட வேண்டும்?” : பப்ஜி மதனின் மனைவிக்கு நீதிபதி கேள்வி - பின்னணி என்ன?