Tamilnadu

பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த வேன்.. 3 பேர் பரிதாப பலி - தப்பியோடி டிரைவர் போலிஸில் சரண் : நடந்தது என்ன?

திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரையாக நேற்று மாலை புறப்பட்டனர்.

தனித்தனி குழுக்களாக பிரிந்து திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு மணப்பாறையை அடுத்த இடையபட்டியான்பட்டி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து மணப்பாறை நோக்கி தக்காளி ஏற்றிச் சென்ற வேன் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்தில் புகுந்தது.

இதில் 7 பக்தர்கள் சாலையில் ஆளுக்கொரு திசையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். உடனே படுகாயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இருப்பினும் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சீகம்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு (24) எரியோடு பகுதியைச் சேர்ந்த சேகர் (35) ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மணப்பாறை மற்றும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 4 பேர் தொடர்ந்து மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுநர் சிவசக்தி சம்பவ இடத்தில் நிற்காமல் மணப்பாறை காவல் நிலையத்திற்கு வந்து போலிஸில் சரண் அடைந்தார். வேன் ஓட்டுனரை கைது செய்த மணப்பாறை போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read: பெட்டிக்கடை வைப்பதில் தகராறு.. ‘Gang War’ சண்டையால் கலவர பகுதியாக மாறிய காவல் நிலையம் - நடந்தது என்ன?