Tamilnadu

பாறை நுனியில் பயங்கர செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞர்.. 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயம் - நடந்தது என்ன?

கொடைக்கான‌ல் வ‌ட்டக்கான‌ல் அருகே வனத்துறையினரால் தடை செய்ய‌ப்ப‌ட்ட‌ ரெட்ராக் ப‌குதியில் செல்ஃபி எடுக்க‌ முய‌ன்று பாறையில் இருந்து தவறி விழுந்த மதுரை வாலிபரை போலிஸார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு நேற்று மதுரை அண்ணாநகர் பகுதியில் இருந்து 8 நபர்கள் கொண்ட இளைஞர் குழுவினர் சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த இளைஞர்கள் வட்டக்கானல் அருகே உள்ள வனத்துறையினரால் தடை செய்யப்பட்ட ரெட்ராக் பகுதிக்கு சென்றுள்ளனர்.

ரெட்ராக் பகுதி மலைமுகடுகள் நிறைந்த ஆபத்தான பள்ளத்தாக்குக‌ள் நிறைந்த‌ பகுதியாகும். இந்தப் பகுதியை கண்டு ரசித்தபின் இளைஞர்கள் அங்கேயே அம‌ர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. மது அருந்திவிட்டு இளைஞர்கள் செல்ஃபி எடுத்துள்ளனர்.

ராம்குமார் (32) என்ற இளைஞர் ம‌ட்டும் பாறையின் நுனி பகுதிக்கு சென்று செல்ஃபி எடுக்க முயன்றுள்ளார். அப்போது நிலை தடுமாறி சுமார் 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயமாகியுள்ளார். மாயமான இளைஞரை உடன் வந்த இளைஞர்கள் நீண்ட‌ நேர‌ம் தேடியுள்ளனர்.

இதனையடுத்து அவரது நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர் உடன் வந்த இளைஞர்களிடம் விசாரணை செய்தனர். விசாரணையில் அனைவரும் ம‌து போதையில் இருந்ததாகவும் செல்ஃபி எடுக்கும்போது ராம்குமார் தவறி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ரெட்ராக் பகுதியில் அடர் பனிமூட்டம் நிலவுவதால் மாயமான இளைஞரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டு, இன்றும் தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை. சுற்றுலா வ‌ந்த‌ இளைஞர் 500 அடி பள்ளத்தில் விழுந்து மாயமான ச‌ம்ப‌வ‌ம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப‌டுத்தியுள்ள‌து.

Also Read: டிராவல் பேக்கில் வைத்து இளம்பெண்ணை ஹாஸ்டலுக்குள் கொண்டு செல்ல முயன்ற மாணவர்... வைரலாகும் வீடியோ!