Tamilnadu

“மதமாற்றம்னு சொல்லச் சொல்லி சிலர் மிரட்டுறாங்க” : ஆட்சியரிடம் ஊர்மக்கள் புகார் - அம்பலமான பா.ஜ.கவின் சதி!

அரியலூர் மாவட்டம் வடுகபாளையத்தைச் சேர்ந்த முருகானந்தம்-கனிமொழி இணையரின் மகள் லாவண்யா. இவர் தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், லாவண்யா கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவமனையில் தன்னை பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, மாணவி மரணத்துக்கு தனியார் பள்ளியின் மதமாற்ற முயற்சியே காரணம் என்று பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. மதமாற்றம் நடந்ததாக மாணவி சொல்வதுபோல வீடியோ ஒன்றும் வெளியாகி பரவியது.

மாணவியிடம் கேள்வி கேட்டு வீடியோ எடுத்தவர், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முத்துவேல் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், மாணவியின் புதிய வீடியோ வெளியானது.

அந்த வீடியோவில் மதமாற்றம் குறித்து எந்த குற்றச்சாட்டையும் மாணவி கூறவில்லை. இதற்கிடையில், விடுதியின் காப்பாளர் ஜெனின் சகாய மேரி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார். தமிழ்நாடு அரசு துரிதமாகச் செயல்பட்டு நடவடிக்கையை எடுத்துவிட்டது.

ஆனாலும் தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள். மேலும் இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதவெறி அரசியலுக்காக கையில் எடுத்து, அவதூறுகளைப் பரப்பி வந்தது அம்பலமாகியுள்ளது.

இந்நிலையில், கிராம மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மைக்கேல்பட்டி கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.

இதுதொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்த மைக்கேல்பட்டி கிராம மக்கள், எங்களது பிள்ளைகளும் அந்தப் பள்ளியில் தான் படித்தனர். மதமாற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை, நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும், ப்ள்ளி நிர்வாகம் மதம் மாறச் சொன்னதாக கூறுமாறு சிலர் ஊருக்குள் வந்து நிர்பந்திக்கின்றனர் என்றும் புகார் அளித்தனர்.

மேலும் நாங்கள் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம், மதமாற்றம் என்ற பிரச்சனையே எழவில்லை என்றும் தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை செய்த விவகாரத்தில் சிலர் அரசியல் செய்து வருகின்றனர் என்றும் குற்றம்சாட்டினர்.

அதுமட்டுமல்லாது, எங்களிடையே பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பதால், யாரையும் மைக்கேல்பட்டி கிராமத்தில் விசாரணை என்கிற பெயரில் தொந்தரவு செய்யக்கூடாது என்றும், தங்களது பிள்ளைகளும் அங்குதான் படிக்கின்றனர். எனவே எங்கள் ஊர் தற்போது பீதியில் இருப்பதாகவும் புகார் தெரிவித்தனர்.

தஞ்சை பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சியே காரணம் என்ற புகார் போலி என்பது நேற்று அம்பலமானதைத் தொடர்ந்து கிராம மக்கள் ஆட்சியரிடம் இத்தகைய புகார் அளித்துள்ளதன் மூலம் பா.ஜ.கவினரி சதித்திட்டம் அம்பலப்பட்டுள்ளது.

Also Read: "அண்ணாமலையின் அசிங்க அரசியல்.. பா.ஜ.க. அரசியல் செய்ய மாணவி மரணம்தான் கிடைத்ததா?" : முரசொலி தாக்கு!