Tamilnadu

மதவெறி அரசியல் செய்ய நினைத்து வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர்... போலி வீடியோ அம்பலம்!

தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலைக்கு மதமாற்றும் முயற்சியே காரணம் என்ற பா.ஜ.கவினரின் புகார் போலி என்பது அம்பலமாகியுள்ளது. வி.ஹெச்.பி நிர்வாகி பதிவு செய்த வீடியோவில் மதம் மாற்றும் முயற்சி நடக்கவில்லை என மாணவி கூறும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மைக்கேல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 19ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார். மருத்துவமனையில் தன்னை பரிசோதித்த மருத்துவர்களிடம் மாணவி, தான் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாகவும், விடுதியில் தன்னை அனைத்து அறைகளையும் தூய்மை செய்ய வேண்டும் என்று வார்டன் கூறியதன் பேரில் ஏற்பட்ட மன உளைச்சலால் பூச்சி மருந்தை குடித்ததாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து போலிஸார் மாணவியிடம் விசாரித்தனர்.

இதற்கிடையே, மாணவி மரணத்துக்கு தனியார் பள்ளியின் மதமாற்ற முயற்சியே காரணம் என்று பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகள் புகார் கூறின. மதமாற்றம் நடந்ததா என்ற கேள்விக்கு மாணவி ஆமாம் என்று சொல்வதுபோல எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்றும் வெளியானது.

மாணவியிடம் கேள்வி கேட்டு வீடியோ எடுத்தவர், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த முத்துவேல் என்பது விசாரணையில் தெரியவந்தது. முத்துவேல், மாணவியின் வாக்குமூலத்தை 4 வீடியோக்களாக பதிவு செய்துள்ளார். அதில் 3 வீடியோக்களில் மாணவி லாவண்யா மதமாற்ற புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ளது அம்பலமாகியுள்ளது.

மதமாற்ற புகாரை கூறும்படி சொல்லிக் கொடுத்து நான்காவது வீடியோ பதிவு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீதிபதி முன் மாணவி கொடுத்த மரண வாக்குமூலத்திலும் மதமாற்ற புகார் குறித்து எதுவும் கூறவில்லை. மாணவி மரணம் தொடர்பாக பெற்றோர் அளித்த முதல் புகாரிலும் மதமாற்றம் குறித்து எந்த குற்றச்சாட்டும் கூறவில்லை என தஞ்சை எஸ்.பி தகவல் அளித்துள்ளார்.

மாணவி பேசுவதை வீடியோ எடுத்த முத்துவேல், 2019ல் பா.ஜ.க ஒன்றிய தலைவராக இருந்தபோது மத போதகரை தாக்கியதாக கைது செய்யப்பட்டவர். அதனால் இந்தப் பள்ளியின் மீது அவதூறு பரப்பும் உள்நோக்கம் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தை பா.ஜ.கவினர் மற்றும் இந்துத்வா கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதவெறி அரசியலுக்காக கையில் எடுத்து, தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி வருவதும், அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டு வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே மதவெறி நோக்கில் கருத்துகளைத் தெரிவித்து வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையை கைது செய்ய வலியுறுத்தி ட்விட்டரில் #ArrestAnnamalai என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

Also Read: ‘17 மாநிலத்துலயும் எப்படி ஆட்சிக்கு வந்தீங்கன்னு மறந்துடுச்சா அண்ணாமலை’ - வெளுத்தெடுத்த தயாநிதி மாறன்!