Tamilnadu

கே.எஸ்.அழகிரி பேச்சுக்கு மேடையிலேயே பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... என்ன சொன்னார் தெரியுமா?

“பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில் திறமையைக் காட்டவேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்" என திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று (27.01.2022) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தி.மு.கழகச் செய்தித் தொடர்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று, மணமக்கள் இ.தரணி – ச.இராகவேந்திர மூர்த்தி ஆகியோரை வாழ்த்தி உரையாற்றினார்.

அதன் விவரம் வருமாறு:

நினைவில் வாழும் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்களுடைய பெயர்த்தி, நம்முடைய கழகத்தினுடைய செய்தி தொடர்புச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுடைய அன்பு மகளுக்கும் - மணமகன் ராகவேந்திர மூர்த்தி அவர்களுக்கும் நம்முடைய அன்பான வாழ்த்துகளோடு இந்த மணவிழா நிகழ்ச்சி நிறைவேறியிருக்கிறது.

இந்த மணவிழா நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மணவிழாவை நடத்தி வைத்து, அதனைத்தொடர்ந்து மணமக்களை வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பை பெற்றமைக்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

நெஞ்சில் என்றைக்கும் நிரந்தரமாக குடியிருக்கும் நினைவில் வாழும் தத்துவமேதை டி.கே.சீனிவாசன் அவர்கள், தன்னுடைய இளமைக் காலத்திலேயே நீதிக்கட்சியில் தந்தை பெரியாரோடு இணைந்து, பின்னர் அது திராவிடர் கழகமாக மாறிய போது - தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை தொடங்கியபோது - அப்போதும் அந்த இயக்கத்தில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களோடு தன்னுடைய பயணத்தை தொடர்ந்து நடத்தி இருக்கிறார்

அதற்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தை பேரறிஞர் அண்ணா தொடங்கிய நேரத்தில், அதில் பங்கேற்ற முன்னோடிகளில் ஒருவராக நம்முடைய டி.கே.சீனிவாசன் அவர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பின்னால் கழகம் துவங்கப்பட்ட காலத்தில் தலைமை செயற்குழு உறுப்பினராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரச்சாரக் குழுவில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு ஒரு சிறந்த பேச்சாளராக கழகத்தினுடைய கொள்கைகளை பட்டிதொட்டி எங்கும் பரப்புகிற ஒரு சிறந்த செயல் வீரராக விளங்கியவர்.

நம்முடைய டி.கே.சீனிவாசன் அவர்களுக்கு இன்னொரு பெருமையும் உண்டு. 1944 செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுடைய திருமண நாள். என்னுடைய அன்னையார் தயாளு அம்மாள் அவர்களை கரம்பிடித்த நாள். அன்றைக்கு டி.கே.சீனிவாசன் அவர்கள்தான் தலைவர் கலைஞருடைய திருமணத்தை நடத்தி வைத்தார் என்பது வரலாறு.

எனவே அப்படிப்பட்ட குடும்பத்தில் இன்றைக்கு நடந்து முடிந்திருக்கும் திருமணத்திற்குத் தலைமை ஏற்றிருக்கும் வாய்ப்பை பெற்றமைக்கு உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன், பெருமைப்படுகிறேன்.

1970-லிருந்து 1976 வரை கழகத்தினுடைய மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பணியாற்றியவர்தான் அவர். விலைவாசி உயர்வு குறித்து நடந்த போராட்டமாக இருந்தாலும், இந்தி ஆதிக்கத்தை - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும், அதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி அதற்குரிய தண்டனையை சிறையில் கழித்தவர் தான் நம்முடைய டி.கே.சீனிவாசன் அவர்கள்.

அவர் தொடக்க காலத்தில் இரயில்வேயில் குமாஸ்தாவாக பணியாற்றியிருக்கிறார். அப்படி பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தாமரைச்செல்வன் என்ற புனைப்பெயரில் திராவிடர் கழகம், தி.மு.கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அந்தப் பெயரில் பணியாற்றியிருக்கிறார்.

1950-இல் தஞ்சையில் எஸ்.எம்.டி தனியார் நிறுவனத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்களோடு இணைந்து போராடியவர் நம்முடைய தத்துவமேதை அவர்கள்.

நம்முடைய டி.கே.சீனிவாசன் அவர்களை பொறுத்தவரைக்கும் இயற்கையிலேயே தலைவர் அண்ணாவினுடைய குரலைப் போல குரலைப் பெற்றவர். அதனால்தான் அண்ணாவின் எதிரொலி என்று அவரை எல்லோரும் அழைப்பதுண்டு.

பேச்சாற்றல் மட்டுமல்ல, கட்டுரைகள், கவிதைகள் ஒரு இலக்கியவாதியாக பல்வேறு நூல்களையும் அவர் எழுதியிருக்கிறார். எனவே அப்படிப்பட்டவர் குடும்பத்தில் நடக்கும் இந்த திருமணத்தில் எல்லோரும் கலந்து கொண்டு வாழ்த்திக் கொண்டிருக்கிறோம். மணமகளுடைய தந்தை டி.கே.எஸ்.இளங்கோவன், நம்முடைய செய்தித் தொடர்பு செயலாளர் அவர்கள் ஆற்றும் பணிகளைப் பற்றி, அவருடைய சிறப்புகளைப் பற்றி பெருமைகளைப் பற்றி எல்லாம் எனக்கு முன்னால் பேசியவர்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.

என்னை பொறுத்தவரையில் அவரிடத்தில் இருக்கும் ஒரு நல்ல குணம் என்னவென்றால், யார் திட்டினாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டார்.

இன்றைக்கு அவருடைய அன்பு மகளுக்கு நடக்கும் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நான் வாழ்த்துவதில் பெருமைப்படுகிறேன்.

இங்கே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் பேசுகிறபோது, “நம்முடைய முதலமைச்சர் அவர்கள் யாரிடத்திலும் அதிகம் பேச மாட்டார். கூட்டணியில் இருக்கும் தலைவர்களிடத்தில் கூட அதிகம் பேச மாட்டார்” என்றெல்லாம் சொன்னார்.

என்னை பொறுத்தவரை பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில் திறமையைக் காட்ட வேண்டும். அதைத்தான் நான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன்.

எனவே அதற்கு நீங்கள் எல்லாம் எந்த அளவிற்குச் சிறப்பாக ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இன்னும் நான் பெருமையாக சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களை ஒப்பீட்டு சொல்லுகிற போது, அந்தந்த மாநிலத்தில் இருக்கும் முதலமைச்சர்களுக்கு எல்லாம் கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட்ட நேரத்தில், அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மு.க.ஸ்டாலின் முதலிடம் என்ற செய்தி. அதில் எனக்கு ஒரு பெருமைதான், சிறப்புதான், அதை நான் மறுக்கவில்லை. முதலமைச்சர் நம்பர் 1 என்று சொல்வதை விட, தமிழ்நாட்டிற்கு நம்பர் 1 இடம் என்று சொல்லும் நிலை வர வேண்டும்.

எனவே அந்த எண்ணத்தோடுதான் இன்றைக்கு இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே அப்படிப்பட்ட ஆட்சியை நடத்தும் இந்தச் சூழ்நிலையில், நம்முடைய டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள், இந்தத் திருமண நிகழ்ச்சியைச் சிறப்போடு நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தத் திருமண நிகழ்ச்சியை நடத்துகிற நேரத்தில், தேர்தல் தேதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அப்படி நடைபெறுகிற தேர்தலில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு மகளிருக்கு வழங்கப்பட வேண்டிய நிலையில் அதை தேர்தலை நடத்துகிறோம்.

அது தேர்தலில் மட்டுமல்ல, அது குடும்பத்திலும், இங்கு மணவிழா காணும் மணமக்களும் வாழ்க்கையில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு நிச்சயமாக இன்பம், துன்பம் எதுவாக இருந்தாலும் அதில் இருக்க வேண்டுமென்று மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களை இந்த நேரத்தில் அன்போடு கேட்டுக் கொண்டு, வாழ்க்கையில் எல்லா நன்மைகளையும் பெற்று, புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச்சொல்லியிருக்கும், “வீட்டிற்கு விளக்காய், நாட்டிற்கு தொண்டர்களாய்” நீங்கள் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களின் தொண்டு மேலும் இயக்கத்திற்கு வலு சேர்க்கும் என்பதை இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Also Read: மதவெறி அரசியல் செய்ய நினைத்து வசமாக மாட்டிக்கொண்ட அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர்... போலி வீடியோ அம்பலம்!