Tamilnadu
கொளத்தூரில் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகள்.. நேரில் அதிரடி ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் சாலைப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு செய்து, குடிநீர் வசதி மற்றும் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (21.1.2022) கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் குடிநீர் வசதி செய்து தரும் பணி மற்றும் ஜி.கே.எம். காலனியில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணிகளை துவக்கி வைத்து, அசோக் அவென்யூ, ரங்கதாஸ் காலனி மற்றும் அஞ்சுகம் நகர் ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்கள் பணிகள் மற்றும் தார்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவஹர் சாலையில் அமைந்துள்ள கௌதமபுரம் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு குடிநீர் வசதி செய்து தரும் வகையில், சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக வியாசர்பாடி நீர்நிலை பகிர்மான நிலையத்திலிருந்து ஜவஹர் சாலை வரை 2.8 கி.மீ. தூரத்திற்கு 99 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குடிநீர் பிரதான குழாய்கள் பதிக்கும் பணிகளை முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, ஜெகநாதன் சாலை மற்றும் அசோக் அவென்யூ பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கிநிற்கும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
பின்னர், ஜி.கே.எம். காலனி, ஜம்புலிங்கம் பிரதான சாலையில் சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 40 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுநீர் அகற்றும் நிலையம் அமைக்கும் பணியினை முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார். மேலும், ரங்கதாஸ் காலனி மற்றும் நேதாஜி காலனி மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இறுதியாக, அஞ்சுகம் நகர் 12-வது தெருவில் தார்சாலை அமைக்கும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும், விரைவாகவும், தரமாகவும், குறித்த நேரத்திலும் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த நிகழ்வின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., சென்னை பெருநகர் குடிநீர் வடிகால் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் மேலாண்மை இயக்குநர்
சி.விஜயராஜ் குமார், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!