Tamilnadu

“மயில்களை கொத்துக் கொத்தாக கொன்ற நபர்” : விசாரணையில் பகீர் தகவல் - நடந்தது என்ன?

திருவண்ணாமலை அடுத்த ராஜாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிராஜா (57). இவர் திருவண்ணாமலை வனச்சரகம் காட்டுப்பகுதி அருகில் ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

இந்த விவசாய நிலத்தில் தினந்தோறும் மயில்கள் வந்து பயிரை மேய்ந்து செல்வதால் தேசிய பறவையான மயில்களை விஷம் வைத்துக் கொள்ள திட்டம் தீட்டி இன்று அதிகாலை விஷம் கலந்த தீனியை மயில்கள் வரும் பாதையில் வீசி சென்றுள்ளார்.

இன்று அதிகாலை மேய்ச்சலுக்கு வந்த 1 ஆண் மற்றும் 5 பெண் மயில் என 6 மயில்கள் விஷம் வைத்த தீனி உண்டு நிலத்தில் ஆங்காங்கே இறந்து கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வனச்சரக அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆங்காங்கே சிதறிக்கிடந்த மயில்களை மீட்டதுடன் விவசாயி காசி ராஜாவை கைது செய்து வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வனச்சரக அலுவலர்கள் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் இரண்டில் ஆஜர்படுத்தி காசி ராஜாவை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “நலமிகு சென்னை.. சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்”: “தி இந்து’’ சிறப்புச் செய்தி!