Tamilnadu

அதிமுகவின் புனைவுகள் போகியில் பொசுங்கும்.. மக்கள் மனதில் மாறாத இடத்தைப் பெற்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் !

கரும்பு உள்ளிட்ட 21 பரிசுப் பொருள்களைக் கொடுத்து இந்த ஆண்டு பொங்கல் திருநாளை புதுப்பொலிவு கொண்டதாக கோடிக்கணக்கான வீடுகளில் மாற்றி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். நிதி நெருக்கடி மிகுந்த இந்த நேரத்திலும் மக்களுக்கு இத்தகைய மாபெரும் பரிசை முதலமைச்சர் வழங்கி இருப்பது அனைத்துத் தரப்பாலும் பாராட்டப்பட்டுள்ளது.

பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்குவதை தாங்கிக் கொள்ள முடியாத அ.தி.மு.க. விஷமிகள் அவதூறுகளைப் பரப்பி வருகிறார்கள். ‘பணம் கொடுத்திருக்க வேண்டும், பணம் கொடுக்காததால் மக்கள் கோபமாக இருக்கிறார்கள்' என்று அவதூறு பரப்பி வருகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டது. வந்த உடனேயே அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதலில் 2 ஆயிரம் ரூபாயும், அடுத்து 2 ஆயிரம் ரூபாயும் என 4 ஆயிரம் ரூபாய் தரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதவியேற்று கோட்டைக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்து கோப்பே அதுதான்.

கொரோனா நிவாரண நிதியாக மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று அ.தி.மு.க. ஆட்சியின் போது கோரிக்கை வைத்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள். பழனிசாமி கொடுத்தது ஆயிரம் ரூபாய்தான். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ரூ.4 ஆயிரம் தரப்பட்டது. இப்படி தான் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத பழனிசாமி கூட்டத்துக்கு இன்றைய ஆட்சியைப் பற்றிக் குறை சொல்ல யோக்கியதை இருக்கிறதா?

கடந்த பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் போது பொங்கல் விழா காலத்தில் என்ன சீர் செய்தார்கள் என்பதை சமூக வலைத்தளத்தில் ஒரு தோழர் விரிவாக எழுதி இருக்கிறார்.

*****

2011 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் தேதி அ.தி.மு.க. தலைமையிலானஆட்சி பொறுப்பேற்றது.

*****

அதற்கு முன் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பை 2012 ஆம் ஆண்டுவரை நிறுத்தி வைத்தார்கள்.

*****

2013 ஆம் ஆண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 ரூபாயில் ஒரு கிலோ பச்சரிசியும், 40 ரூபாயில் ஒரு கிலோ சர்க்கரையும் பொங்கல் பரிசு தொகுப்பாககொடுக்கப்பட்டது. இத்துடன் ரூ.100 ரொக்கத் தொகையும் கொடுக்கப்பட்டது. இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.160 மதிப்பு.

*****

2014 ஆம் ஆண்டும் இதே தொகுப்புதான்.

*****

2015 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

*****

2016 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூபாய் 100 வழங்கப்பட்டது.

*****

2017 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பணம் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பணம் ஏதும் தரப்படவில்லை.

*****

2018 ஆம் ஆண்டு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் பணம் ஏதும் தரப்படவில்லை.

*****

2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரப்போவதை மனதில் வைத்து ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்பு துண்டு ஒன்று, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் கொடுத்தார்கள். அதுவரை 100 ரூபாய் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு

வந்த நிலையில் வரவிருந்த நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து 1000 ரூபாய் கொடுக்கப்பட்டது.

*****

2020 ஆம் ஆண்டும் அதே 1000 ரூபாயுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

*****

2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக 2500 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. - இதுதான் அ.தி.மு.க. செய்தது ஆகும். அதாவது நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் வரும் காலம் என்றால் பணம் கொடுப்பது இல்லாவிட்டால் வாயையும் கையையும் பொத்திக் கொள்வதுதான் அவர்களது பாணியாக இருந்துள்ளது. பல ஆண்டுகள் பொங்கல் தொகுப்பே வழங்கவில்லை. இந்த லட்சணத்தில் பொங்கல் பரிசுகளைப் பற்றிய புனைவுகளையும் பொய்யுரைகளையும் அ.தி.மு.க. சொல்லி வருகிறது. 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இப்போது 21 வகையான பொருட்கள் தரப்படுகிறது. பச்சரிசி - 1 கிலோ, வெல்லம் - 1 கிலோ, முந்திரி - 50 கிராம், திராட்சை - 50 கிராம், ஏலக்காய் - 10 கிராம், பாசிப் பருப்பு - 500 கிராம், நெய் - 100 கிராம், மஞ்சள் தூள் - 100 கிராம், மிளகாய் தூள் - 100 கிராம், மல்லித்தூள் - 100 கிராம், கடுகு - 100 கிராம், சீரகம் - 100 கிராம், மிளகு - 5 கிராம், புளி - 200 கிராம், கடலைப் பருப்பு - 250 கிராம், உளுந்தம் பருப்பு - 250 கிராம், ரவை - 1 கிலோ, கோதுமை மாவு - 1 கிலோ, உப்பு - 500 கிராம், ஒரு கரும்பு, ஒரு துணிப்பை - ஆகியவைதான் அரசால் தரப்பட்டுள்ள பொங்கல் பரிசு.

இதில் பச்சரிசி, வெல்லம், ரவை, கோதுமை மாவு ஆகிய அனைத்தும் ஒரு கிலோ தரப்படுகிறது. இதன் முக்கியத்துவம் என்பது ஏழை, எளிய மக்களுக்குத்தான் தெரியும். இந்த பொருள்கள் அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சென்றடைவதை அரசு உறுதிப்படுத்தி இருக்கிறது. இதில் ஏதாவது குறைபாடு இருந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்ணை அரசு அறிவித்துள்ளது.

அமைச்சர்களும் அதிகாரிகளும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் நேரடியாக போய் இதனை ஆய்வு செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கட்டளையிட்டுள்ளார். அவரே இரண்டு மூன்று நாட்கள் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளுக்குச் சென்று பார்வையிட்டு வருகிறார். மக்களிடம் நேரடியாக தகவல்களைக் கேட்கிறார். பொருட்களை பார்வையிடுகிறார்.

1,297 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2.15 கோடி மக்கள் பயன்பெறும் மகத்தான திட்டத்தின் மூலமாக மக்கள் மனதில் மீண்டும் மாறாத இடத்தைப் பெற்று விட்டார் முதலமைச்சர். அ.தி.மு.க.வின் புனைவுகள் போகியில் பொசுங்கும்!

Also Read: "தி.மு.க இந்து விரோத கட்சி என்ற அவதூறை அடித்து நொறுக்கிவிட்டார் சேகர்பாபு” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!